குறள் (Kural) - 885
உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
ஏதம் பலவும் தரும்.
பொருள்
நெருங்கிய உறவினருக்கிடையே தோன்றும் உட்பகையானது அவர்களுக்குக் கேடு விளைவிக்கக் கூடிய பல துன்பங்களை உண்டாக்கும்.
Tamil Transliteration
Uralmuraiyaan Utpakai Thondrin Iralmuraiyaan
Edham Palavum Tharum.
மு.வரதராசனார்
உறவுமுறையோடு உட்பகை உண்டாகுமானால், அது ஒருவனுக்கு இறக்கும் வகையான துன்பம் பலவற்றையும் கொடுக்கும்.
சாலமன் பாப்பையா
உறவு முறையை உடையவனே ( சொந்தக் கட்சிக்காரனே) உட்பகையானால், அது சாவோடு கூடிய குற்றம் பலவற்றையும் உண்டாக்கும்.
கலைஞர்
நெருங்கிய உறவினருக்கிடையே தோன்றும் உட்பகையானது அவர்களுக்குக் கேடு விளைவிக்கக் கூடிய பல துன்பங்களை உண்டாக்கும்.
பரிமேலழகர்
உறல் முறையான் உட்பகை தோன்றின் - புறத்து உறவுமுறைத் தன்மையோடு கூடிய உட்பகை அரசனுக்கு உண்டாவதாயின்; இறல் முறையான் ஏதம் பலவும் தரும் - அஃது அவனுக்கு இறத்தல் முறையோடு கூடிய குற்றம் பலவற்றையும் கொடுக்கும். (அவை, புறப்பகைத் துணையாய் நின்றே அது தோன்றாமல் கோறல் முதலிய வஞ்சனை செய்தலும், அமைச்சர் முதலிய உறுப்புக்களைத் தேய்த்தலும் முதலாயின.)
புலியூர்க் கேசிகன்
புறத்தே உறவு முறைத் தன்மையோடு பழகுவாரிடம் உட்பகை தோன்றினால், அ·து, அவனுக்கு இறத்தல் முறைமையோடு கூடிய பல குற்றங்களையும் தரும்
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | நட்பியல் (Natpiyal) |
அதிகாரம் (Adhigaram) | உட்பகை (Utpakai) |