குறள் (Kural) - 866

குறள் (Kural) 866
குறள் #866
காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும்.

பொருள்
சிந்திக்காமலே சினம் கொள்பனாகவும், பேராசைக்காரனாகவும் இருப்பவனின் பகையை ஏற்று எதிர் கொள்ளலாம்.

Tamil Transliteration
Kaanaach Chinaththaan Kazhiperung Kaamaththaan
Penaamai Penap Patum.

மு.வரதராசனார்

ஒருவன் உண்மை காணாத சினம் உடையவனாய், மிகப் பெரிய ஆசை உடையவனாய் இருந்தால் அவனுடைய பகை விரும்பி மேற்கொள்ளப்படும்.

சாலமன் பாப்பையா

நன்மை தீமை, வேண்டியவர் வேண்டாதார் என்றெல்லாம் எண்ணாது, கோபம் மிக்க, மேலும் மேலும் பெருகும் பெண்ணாசையை உடைய அரசின் பகைமை, பிறரால் விரும்ப்படும்.

கலைஞர்

சிந்திக்காமலே சினம் கொள்பனாகவும், பேராசைக்காரனாகவும் இருப்பவனின் பகையை ஏற்று எதிர் கொள்ளலாம்.

பரிமேலழகர்

காணாச் சினத்தான் - தன்னையும் பிறரையும் தான் அறியாமைக்கு ஏதுவாகிய வெகுளியையுடையான் யாவன்; கழி பெருங் காமத்தான் - மேன்மேல் வளராநின்ற மிக்க காமத்தையுடையான் யாவன்; பேணாமை பேணப்படும் - அவரது பகைமை விரும்பிக் கொள்ளப்படும். (காணாத சினம் என்பது விகாரமாயிற்று. முன்னோனுக்கு யாவரும் பகையாகலானும், ஏனோனுக்குக் காரியம் தோன்றாமையானும், தாமே அழிவர் என்பதுபற்றி, இவர் 'பேணாமை பேணப்படும்' என்றார்.)

புலியூர்க் கேசிகன்

தன்னையும் பிறரையும் அறியாமைக்கு காரணமான சினம் கொண்டவன், மேன்மேலும் பெருகும் காமத்தான் பகைமை, பிறரால் விரும்பி ஏற்றுக் கொள்ளப்படும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)நட்பியல் (Natpiyal)
அதிகாரம் (Adhigaram)பகை மாட்சி (Pakaimaatchi)