குறள் (Kural) - 865

குறள் (Kural) 865
குறள் #865
வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க்கு இனிது.

பொருள்
நல்வழி நாடாமல், பொருத்தமானதைச் செய்யாமல், பழிக்கு அஞ்சாமல், பண்பும் இல்லாமல் ஒருவன் இருந்தால் அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான்.

Tamil Transliteration
Vazhinokkaan Vaaippana Seyyaan Pazhinokkaan
Panpilan Patraarkku Inidhu.

மு.வரதராசனார்

ஒருவன் நல்வழியை நோக்காமல் பொருத்தமானவற்றைச் செய்யாமல், பழியையும் பார்க்காமல், நற்பண்பும் இல்லாமல் இருந்தால் அவன் பகைவர்க்கும் எளியனவான்.

சாலமன் பாப்பையா

நீதி நூல்கள் ‌சொல்லும் வழியைப் படித்து அறியாத, நல்லனவற்றைச் செய்யாத, அவை தெரியாமலே செயலாற்றுவதால் வரும் வழியையும் எண்ணாத, நல்ல பண்புகளும் இல்லாத அரசின் பகைமை, பகைவர்க்கு இனிது.

கலைஞர்

நல்வழி நாடாமல், பொருத்தமானதைச் செய்யாமல், பழிக்கு அஞ்சாமல், பண்பும் இல்லாமல் ஒருவன் இருந்தால் அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான்.

பரிமேலழகர்

வழிநோக்கான் - ஒருவன் நீதிநூலை ஓதான்; வாய்ப்பன செய்யான் - அது விதித்த தொழில்களைச் செய்யான்; பழி நோக்கான் - தனக்கு வரும் பழியைப் பாரான்; பண்புஇலன் - தான் பண்புடையன் அல்லன்; பற்றார்க்கு இனிது - அவன் பகைவர்க்கு அப்பகைமை இனிது. (தொல்லோர் அடிப்பட வழங்கி வந்ததாகலான் 'வழி' என்றும் , தப்பாது பயன்படுதலின் 'வாய்ப்பன' என்றும் , இக்குற்றங்களுடையான் தானே அழிதலின் 'பற்றார்க்கு இனிது' என்றும் கூறினார்.)

புலியூர்க் கேசிகன்

நீதி நூல்களைக் கல்லாதவன், அவை விதித்த செயல்களைச் செய்யாதவன், தனக்கு வரும் பழியைப் பாராதவன், பண்பற்றவன், ஆகியவனைப் பகைத்தலும் இனிதாகும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)நட்பியல் (Natpiyal)
அதிகாரம் (Adhigaram)பகை மாட்சி (Pakaimaatchi)