குறள் (Kural) - 854

குறள் (Kural) 854
குறள் #854
இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்.

பொருள்
துன்பத்திலேயே பெருந்துன்பம் பகையுணர்வுதான் அந்த உணர்வை ஒருவன் அகற்றி விடுவானேயானால், அது இன்பத்திலேயே பெரும் இன்பமாகும்.

Tamil Transliteration
Inpaththul Inpam Payakkum Ikalennum
Thunpaththul Thunpang Ketin.

மு.வரதராசனார்

இகல் என்று சொல்லப்படும் துன்பங்களில் கொடிய துன்பம் கெட்டுவிட்டால், அஃது அவனுக்கு இன்பங்களில் சிறந்த இன்பத்தை கொடுக்கும்.

சாலமன் பாப்பையா

துன்பங்கள் எல்லாவற்றிலும் மிகக் கொடிதான மனவேறுபாடு எனும் துன்பம், ஒருவனது உள்ளத்துள் இல்லை என்றால், அது அவனுக்கு இன்பங்கள் எல்லாவற்றிலும் சிறந்த இன்பத்தைத் தரும்.

கலைஞர்

துன்பத்திலேயே பெருந்துன்பம் பகையுணர்வுதான். அந்த உணர்வை ஒருவன் அகற்றி விடுவானேயானால், அது இன்பத்திலேயே பெரும் இன்பமாகும்.

பரிமேலழகர்

இகல் என்னும் துன்பத்துள் துன்பம் கெடின் - மாறுபாடு என்று சொல்லப்படுகின்ற துன்பங்கள் எல்லாவற்றினும் மிக்க துன்பம் ஒருவனுக்கு இல்லையாயின்; இன்பத்துள் இன்பம் பயக்கும் - அவ்வின்மை அவனுக்கு இன்பங்கள் எல்லாவற்றினும் மிக்க இன்பத்தினைக் கொடுக்கும்.(துன்பத்துள் துன்பம் - பலரொடு பொருது வலி தொலைதலான் யாவர்க்கும் எளியனாயுறுவது. அதனை இடையின்றியே பயத்தலின். 'இகல் என்னும்' என்றார். இன்பத்துள்இன்பம் - யாவரும் நட்பாகலின் எல்லாப் பயனும் எய்தியுறுவது.)

புலியூர்க் கேசிகன்

‘மாறுபாடு’ என்னும் துன்பங்களுள் பெரிதான துன்பம் இல்லையானால், அவ்வின்மையே ஒருவனுக்கு இன்பங்களுள் எல்லாம் சிறந்த இன்பத்தைத் தரும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)நட்பியல் (Natpiyal)
அதிகாரம் (Adhigaram)இகல் (Ikal)