குறள் (Kural) - 853

குறள் (Kural) 853
குறள் #853
இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்
தாவில் விளக்கம் தரும்.

பொருள்
மனமாறுபாடு என்றும் நோயை யார் தங்கள் மனத்தை விட்டு அகற்றிவிடுகிறார்களோ அவர்களுக்கு மாசற்ற நீடித்த புகழ் உண்டாகும்.

Tamil Transliteration
Ikalennum Evvanoi Neekkin Thavalillaath
Thaavil Vilakkam Tharum.

மு.வரதராசனார்

ஒருவன் இகல் என்று சொல்லப்படும் துன்ப நோயை நீக்கி விட்டால் அஃது அவனுக்கு அழிவில்லாத நிலையான புகழைக் கொடுக்கும்.

சாலமன் பாப்பையா

மனவேறுபாடு என்னும் துன்பம் தரும் நோயை மனத்திலிருந்து நீக்கினால், அது ஒருவனுக்குக் கெடாத, அழியாத புகழைக் கொடுக்கும்.

கலைஞர்

மனமாறுபாடு என்றும் நோயை யார் தங்கள் மனத்தை விட்டு அகற்றிவிடுகிறார்களோ அவர்களுக்கு மாசற்ற நீடித்த புகழ் உண்டாகும்.

பரிமேலழகர்

இகல் என்னும் எவ்வ நோய் நீக்கின் - மாறுபாடு என்று சொல்லப்படுகின்ற துன்பத்தைச் செய்யும் நோயை ஒருவன் தன் மனத்தினின்று நீக்குமாயின்; தவல் இல்லாத் தாவில் விளக்கம் தரும் - அவனுக்கு அந்நீக்குதல் எஞ்ஞான்றும் உளனாதற்கும் ஏதுவாய புகழைக் கொடுக்கும். (தவல் இல்லாமை, அருத்தாபத்தியான் அப்பொருட்டாயிற்று. தாஇல் விளக்கம் - வெளிப்படை. யாவரும் நண்பராவர், ஆகவே, எல்லாச் செல்வமும் எய்திக் கொடை முதலிய காரணங்களால் புகழ் பெறும் என்பதாம்.)

புலியூர்க் கேசிகன்

‘மாறுபாடு’ என்னும் துன்பம் செய்யும் நோயை மனத்தில் இருந்தே நீக்கி விட்டால், அவனுக்கு எந்தக் காலத்திலும் உள்ளவனாகின்ற நிலையான புகழை, அதுவே தரும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)நட்பியல் (Natpiyal)
அதிகாரம் (Adhigaram)இகல் (Ikal)