குறள் (Kural) - 840

குறள் (Kural) 840
குறள் #840
கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்.

பொருள்
அறிஞர்கள் கூடியுள்ள மன்றத்தில் ஒரு முட்டாள் நுழைவது என்பது, அசுத்தத்தை மிதித்த காலைக் கழுவாமலே படுக்கையில் வைப்பதைப் போன்றது.

Tamil Transliteration
Kazhaaakkaal Palliyul Vaiththatraal Saandror
Kuzhaaaththup Pedhai Pukal.

மு.வரதராசனார்

சான்றோரின் கூட்டத்தில் பேதை புகுதல், ஒருவன் தூய்மையில்லாதவற்றை மிதித்துக் கழுவாதக் காலைப் படுக்கையில் வைத்தாற் போன்றது.

சாலமன் பாப்பையா

சான்றோர் கூடியிருக்கும் இடத்துள் அறிவற்றவன் நுழைவது, கழுவாத காலைப் படுக்கைமேல் வைத்தது போலாகும்.

கலைஞர்

அறிஞர்கள் கூடியுள்ள மன்றத்தில் ஒரு முட்டாள் நுழைவது என்பது, அசுத்தத்தை மிதித்த காலைக் கழுவாமலே படுக்கையில் வைப்பதைப் போன்றது.

பரிமேலழகர்

சான்றோர் குழாத்துப் பேதை புகல் - சான்றோர் அவையின் கண் பேதையாயினான் புகுதல்; கழாக்கால் பள்ளியுள் வைத்தற்று - தூய அல்ல மிதித்த காலை இன்பந்தரும் அமளிக்கண்ணே வைத்தாற் போலும். (கழுவாக்கால் என்பது இடக்கரடக்கு. இதனால் அவ்வமளியும் இழிக்கப்படுமாறு போல, இவனால் அவ்வவையும் இழிக்கப்படும் என்பதாம். இதனான், அவன் அவையிடை இருக்குமாறு கூறப்பட்டது.)

புலியூர்க் கேசிகன்

சான்றோர்களின் கூட்டத்தில் ஒரு பேதை புகுதலானது, மாசுபடிந்த காலைக் கழுவாமல், தொழுகைக்குரிய பள்ளியினுள்ளே எடுத்து வைப்பது போன்றதாகும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)நட்பியல் (Natpiyal)
அதிகாரம் (Adhigaram)பேதைமை (Pedhaimai)