குறள் (Kural) - 838
மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
கையொன்று உடைமை பெறின்.
பொருள்
நல்லது கெட்டது தெரியாதவன் பேதை; அந்தப் பேதையின் கையில் ஒரு பொருளும் கிடைத்துவிட்டால் பித்துப் பிடித்தவர்கள் கள்ளையும் குடித்துவிட்ட கதையாக ஆகிவிடும்.
Tamil Transliteration
Maiyal Oruvan Kaliththatraal Pedhaidhan
Kaiyondru Utaimai Perin.
மு.வரதராசனார்
பேதை தன் கையில் ஒரு பொருள் பெற்றால் (அவன் நிலைமை) பித்து பிடித்த ஒருவன் கள்குடித்து மயங்கினார் போன்றதாகும்.
சாலமன் பாப்பையா
அறிவற்றவன் தன்னிடம் ஒன்றைச் சொந்தமாகப் பெறுவது, முன்பே பிடித்துப் பிடித்தவன், கள்ளால் மயங்கியும் நிற்பது போல் ஆகும்.
கலைஞர்
நல்லது கெட்டது தெரியாதவன் பேதை; அந்தப் பேதையின் கையில் ஒரு பொருளும் கிடைத்துவிட்டால் பித்துப் பிடித்தவர்கள் கள்ளையும் குடித்துவிட்ட கதையாக ஆகிவிடும்.
பரிமேலழகர்
பேதை தன் கை ஒன்று உடைமை பெறின் - பேதையாயினான் தன் கைக்கண்ணே ஒன்றனை உடைமையாகப் பெற்றானாயின்; மையல் ஒருவன் களித்தற்று - அவன் மயங்குதல் முன்னே பித்தினை உடையானொருவன் அம்மயக்கத்தின்மேலே மதுவுண்டு மயங்கினாற்போலும். ('பெறின்' எனவே, தெய்வத்தான் அன்றித் தன்னாற் பெறாமை பெற்றாம். பேதைமையும் செல்வக் களிப்பும் ஒருங்கு உடைமையால் அவன் செய்வன, மையலும் மதுக்களிப்பும் ஒருங்குடையான் செய்வனபோல் தலை தடுமாறும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் அவன் செல்வம் எய்தியவழிப் பயன் கொள்ளுமாறு கூறப்பட்டது.)
புலியூர்க் கேசிகன்
பேதை ஒரு பொருளைத் தனது உடைமையாகப் பெற்றால், மயங்கிய ஒருவன் மேன்மேலும் கள்ளைப் பருகியது போல நிலைமாறி வழிதவறி நடப்பான்
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | நட்பியல் (Natpiyal) |
அதிகாரம் (Adhigaram) | பேதைமை (Pedhaimai) |