குறள் (Kural) - 836

குறள் (Kural) 836
குறள் #836
பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின்.

பொருள்
நேர்மை வழி அறியாத மூடர், மேற்கொண்ட செயலைத் தொடர முடியாமல், அதனால் அச்செயலும் கெட்டுத் தம்மையும் தண்டித்துக் கொள்வர்.

Tamil Transliteration
Poipatum Ondro Punaipoonum Kaiyariyaap
Pedhai Vinaimer Kolin.

மு.வரதராசனார்

ஒழுக்க நெறி அறியத பேதை ஒருச் செயலை மேற்கொண்டால் (அந்த செயல் முடிவுபெறாமல்) பொய்படும், அன்றியும் அவன் குற்றவாளியாகித் தளை பூணுவான்.

சாலமன் பாப்பையா

செய்யும் வழி தெரியாத அறிவற்றவன் ஒரு செயலைச் செய்யத் தொடங்கினால் செயலும் கெட்டு, அவனும் கெட்டுப் போவான்.

கலைஞர்

நேர்மை வழி அறியாத மூடர், மேற்கொண்ட செயலைத் தொடர முடியாமல், அதனால் அச்செயலும் கெட்டுத் தம்மையும் தண்டித்துக் கொள்வர்.

பரிமேலழகர்

கை அறியாப் பேதை வினைமேற் கொளின் - செய்யும் முறைமை அறியாத பேதை ஒரு கருமத்தை மேற்கொள்வானாயின், பொய்படும் ஒன்றோ புனைபூணும் - அதுவும் புரைபடும், தானும் தளை பூணும். (புரைபடுதல் - பின் ஆகாவகை உள்ளழிதல். 'ஒன்றோ' என்பது எண்ணிடைச் சொல். அதனையும் கெடுத்துத் தானும் கெடும் என்பதாம். இதனான் அவன் செல்வம் படைக்குமாறு கூறப்பட்டது.)

புலியூர்க் கேசிகன்

ஒன்றின் செய்வகை அறியாத பேதை அதனைச் செய்வதற்கு முற்படுவதால், அது பொய்யாகிப் போவதுடன், அவனும் தளைபூண்கின்ற துயரத்தை அடைவான்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)நட்பியல் (Natpiyal)
அதிகாரம் (Adhigaram)பேதைமை (Pedhaimai)