குறள் (Kural) - 817

குறள் (Kural) 817
குறள் #817
நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும்.

பொருள்
சிரித்துப் பேசி நடிப்பவர்களின் நட்பைக் காட்டிலும் பகைவர்களால் ஏற்படும் துன்பம் பத்துக்கோடி மடங்கு நன்மையானது என்று கருதப்படும்.

Tamil Transliteration
Nakaivakaiya Raakiya Natpin Pakaivaraal
Paththatuththa Koti Urum.

மு.வரதராசனார்

(அகத்தில் அன்பு இல்லாமல் புறத்தில்) நகைக்கும் தன்மை உடையவரின் நட்பை விட, பகைவரால் வருவன பத்துகோடி மடங்கு நன்மையாகும்.

சாலமன் பாப்பையா

சிரித்துச் செல்லும் இயல்பினராகிய நட்பைக் காட்டிலும், பகைவரால் வருவன பத்துக் கோடி மடங்கு நன்மையாம்.

கலைஞர்

சிரித்துப் பேசி நடிப்பவர்களின் நட்பைக் காட்டிலும் பகைவர்களால் ஏற்படும் துன்பம் பத்துக்கோடி மடங்கு நன்மையானது என்று கருதப்படும்.

பரிமேலழகர்

நகை வகையர் ஆகிய நட்பின் -தாம் அறிதல் வகையாகாது நகுதல் வகையராதற்கு ஏதுவாகிய நட்பான் வருவனவற்றின்; பகைவரான் பத்து அடுத்த கோடி உறும் - பகைவரான் வருவன பத்துக்கோடி மடங்கு நல்ல. (நட்பு : ஆகுபெயர். அந்நட்பாவது விடமரும், தூர்த்தரும், வேழம்பரும் போன்று பலவகையான் நகுவித்துத் தாம் பயன் கொண்டு ஒழிவாரோடு உளதாயது. 'பகைவரான்' என்பது அவாய் நிற்றலின், 'வருவன' என்பது வருவிக்கப்பட்டது. பத்து அடுத்த கோடி: பத்தாகத் தொகுத்த கோடி. அந்நட்பான் வரும் இன்பங்களின் அப்பகைவரான் வரும் துன்பங்கள் இறப்ப நல்ல என்பதாம். இதற்குப் பிறரெல்லாம் சொல்லிலக்கணத்தோடு மாறு கொள உரைத்தார்.)

புலியூர்க் கேசிகன்

வெற்றுரை பேசிச் சிரித்து மகிழ்வதற்கு மட்டுமே பயன்படும் தீயோரின் நட்பைக் காட்டிலும், பகைவராலே, பத்துக் கோடிக்கும் மேலான நன்மை நமக்குக் கிடைக்கும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)நட்பியல் (Natpiyal)
அதிகாரம் (Adhigaram)தீ நட்பு (Thee Natpu)