குறள் (Kural) - 816

குறள் (Kural) 816
குறள் #816
பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும்.

பொருள்
அறிவில்லாதவனிடம் நெருங்கிய நட்புக் கொண்டிருப்பதை விட, அறிவுடைய ஒருவரிடம் பகை கொண்டிருப்பது கோடி மடங்கு மேலானதாகும்.

Tamil Transliteration
Pedhai Perungezheei Natpin Arivutaiyaar
Edhinmai Koti Urum.

மு.வரதராசனார்

அறிவில்லாதவனுடைய மிகப் பொருந்திய நட்பை விட அறிவுடையவரின் நட்பில்லாத தன்மை கோடி மடங்கு நன்மை தருவதாகும்.

சாலமன் பாப்பையா

அறிவற்றவனின் மிக நெருக்கமான நட்பைக் காட்டிலும் அறிவுடையார்களின் பகை, கோடி நன்மையாம்.

கலைஞர்

அறிவில்லாதவனிடம் நெருங்கிய நட்புக் கொண்டிருப்பதை விட, அறிவுடைய ஒருவரிடம் பகை கொண்டிருப்பது கோடி மடங்கு மேலானதாகும்.

பரிமேலழகர்

பேதை பெருங்கெழீஇ நட்பின் - அறிவிலானது மிகச் சிறந்த நட்பின்; அறிவுடையார் ஏதின்மை கோடி உறும் - அறிவுடையானது பகைமை கோடி மடங்கு நன்று.( 'கெழீஇய' என்பதன் இறுதி நிலை விகாரத்தால் தொக்கது. பன்மை உயர்த்தற்கண் வந்தது. அறிவுடையான் பகைமை ஒருதீங்கும் பயவாமையாaனும், பேதை நட்பு எல்லாத் தீங்கும் பயத்தலானும், 'கோடி உறும்' என்றார். 'பெருங்கழி நட்பு'என்று பாடம் ஓதுவாரும் உளர்.)

புலியூர்க் கேசிகன்

பேதையாளனது மிகவும் செறிவான நட்பைக் காட்டிலும் அறிவுடையவர்களின் தொடர்பு இல்லாமல் இருப்பது, ஒருவனுக்கு கோடி நன்மை தருவதாக விளங்கும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)நட்பியல் (Natpiyal)
அதிகாரம் (Adhigaram)தீ நட்பு (Thee Natpu)