குறள் (Kural) - 80
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.
பொருள்
அன்புநெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும்; இல்லையேல், அது எலும்பைத் தோல் போர்த்திய வெறும் உடலேயாகும்.
Tamil Transliteration
Anpin Vazhiyadhu Uyirnilai Aqdhilaarkku
Enpudhol Porththa Utampu.
மு.வரதராசனார்
அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நின்ற உடம்பாகும்: அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல்போர்த்த வெற்றுடம்பே ஆகும்.
சாலமன் பாப்பையா
அன்பை
அடிப்படையாகக் கொண்டதே உயிர் நிறைந்த இந்த உடம்பு, அன்பு மட்டும் இல்லை
என்றால் இந்த உடம்பு வெறும் எலும்பின்மேல் தோலைப் போர்த்தியது போன்றது
ஆகும்.
கலைஞர்
அன்புநெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும்; இல்லையேல், அது எலும்பைத் தோல் போர்த்திய வெறும் உடலேயாகும்.
பரிமேலழகர்
அன்பின் வழியது உயிர்நிலை - அன்பு முதலாக அதன் வழிநின்ற உடம்பே உயிர்நின்ற உடம்பாவது; அஃது இலார்க்கு உடம்பு என்பு தோல் போர்த்த - அவ்வன்பு இல்லாதார்க்கு உளவான உடம்புகள் என்பினைத் தோலால் போர்த்தன ஆம்; உயிர் நின்றன ஆகா. (இல்லறம் பயவாமையின், அன்ன ஆயின. இவை நான்கு பாட்டானும் அன்பில்வழிப்படும் குற்றம் கூறப்பட்டது.)
ஞா.தேவநேயப் பாவாணர்
அன்பின் வழியது உயிர்நிலை - அன்பின் வழிப்பட்ட உடம்பே உயிர்நிலை என்று சிறப்பித்துச் சொல்லப் பெறுவது; அஃது இல்லார்க்கு உடம்பு என்பு தோல் போர்த்த - அவ்வன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்புகள் உயிரில்லாது எலும்பைத் தோலாற் போர்த்த போர்ப்புக்களே. அன்பின் வழியது என்பது அன்பு செய்தற்கென்றே ஏற்பட்டது. இதன் விளக்கமே, அன்போ டியைந்த வழக்கென்ப வாருயிர்க் கென்போ டியைந்த தொடர்பு. என்னுங் குறள். உயிர்நிலை என்பது கதவுநிலை என்பது போன்ற கூட்டுச் சொல். என்புதோற் போர்ப்பு என்றது பிணத்தினும் இழிந்த தென்னுங் குறிப்பினது.
மணக்குடவர்
உடம்பிற்கு அகத்துறுப்பாகிய அன்பிலார்க்குப் புறத்துறுப்புகளெல்லாம் யாதினைச் செய்யும்?.
புலியூர்க் கேசிகன்
உயிர்நிலை என்பது அன்பின் வழியாக அமைந்ததே; அஃது இல்லாதவருக்கு எலும்பைத் தோலால் போர்த்த உடம்பு மட்டுமேயாகும்
பால் (Paal) | அறத்துப்பால் (Araththuppaal) |
---|---|
இயல் (Iyal) | இல்லறவியல் (Illaraviyal) |
அதிகாரம் (Adhigaram) | அன்புடைமை (Anputaimai) |