குறள் (Kural) - 79

குறள் (Kural) 79
குறள் #79
புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.

பொருள்
அன்பு எனும் அகத்து உறுப்பு இல்லாதவர்க்குப் புறத்து உறுப்புகள் அழகாக இருந்து என்ன பயன்?.

Tamil Transliteration
Puraththurup Pellaam Evanseyyum Yaakkai
Akaththuruppu Anpi Lavarkku.

மு.வரதராசனார்

உடம்பின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு உடம்பின் புறத்து உறுப்புக்கள் எல்லாம் என்ன பயன் செய்யும்

சாலமன் பாப்பையா

குடும்பத்திற்கு அக உறுப்பாகிய அன்பு இல்லாவதர்களுக்கு வெளி உறுப்பாக விளங்கும் இடம், பொருள், ஏவல் என்பன என்ன பயனைத் தரும்?

கலைஞர்

அன்பு என்னும் அகத்து உறுப்பு இல்லாதவர்க்குப் புறத்து உறுப்புக்கள் அழகாக இருந்து என்ன பயன்?

பரிமேலழகர்

யாக்கை அகத்து உறுப்பு அன்பு இலவர்க்கு - யாக்கை அகத்தின்கண் நின்று (இல்லறத்திற்கு) உறுப்பாகிய அன்புடையர் அல்லாதார்க்கு; புறத்து உறுப்பு எல்லாம் எவன் செய்யும் - ஏனைப் புறத்தின்கண் நின்று உறுப்பாவன எல்லாம் அவ்வறஞ்செய்தற்கண் என்ன உதவியைச் செய்யும்.? (புறத்து உறுப்பாவன: இடனும், பொருளும், ஏவல் செய்வாரும் முதலாயின. துணையொடு கூடாதவழி அவற்றால் பயன் இன்மையின் 'எவன் செய்யும்' என்றார். உறுப்புப் போறலின் 'உறுப்பு' எனப்பட்டன 'யாக்கையின் கண் முதலிய உறுப்புக்கள் எல்லாம் என்ன பயனைச் செய்யும், மனத்தின்கண் உறுப்பு ஆகிய அன்பு இல்லாதார்க்கு' என்று உரைப்பாரும் உளர்.அதற்குஇல்லறத்தோடு யாதும் இயைபு இல்லாமை அறிக.

ஞா.தேவநேயப் பாவாணர்

யாக்கை யகத்து உறுப்பு அன்புஇலவர்க்கு - இல்லறம் நடத்துவாரின் உடம்புள் நின்று இல்லறத்திற்கு உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு; புறத்து உறுப்பு எல்லாம் எவன் செய்யும் - மற்றப் புறத்து நின்று உறுப்பாவன வெல்லாம் அவ்வறஞ் செய்தற்கண் என்ன உதவியைச் செய்யும்? புறத்துறுப்பாவன இடம் பொரு ளேவல் முதலியன. இது பரிமேலழக ருரையைத் தழுவியது. இனி, மணக்குடவர் பரிதி காளிங்கர் உரைக் கருத்து வருமாறு :- உடம்பிற்கு அகத்துறுப்பாகிய அன்பிலாதவர்க்குப் புறத்துறுப்பாகிய மெய் வாய் கண் மூக்குச் செவியும், மார்பும் தோளும் முகமும் மயிர்முடியும் பிறவும், மரப்பாவை போல் அழகாயிருந்தும் என்ன பயன்? இதுவுங் கொள்ளத் தக்கதே, அகத்துறுப்பாகிய அன்பில்லாதவர்க்குப் புறுத் துறுப்பாகிய ஐம்பொறிகளும் கை கால் முதலிய வினையுறுப்புக்களும் நிறைவாயிருந்தும், அவற்றால் இல்லற நடப்பிற்கு என்ன பயன் என்று வினவற்கிட மிருத்தலால், "அதற்கு இல்லறத்தோடு யாதுமியை பில்லாமை யறிக". என்று பரிமேலழகர் மறுத்துரைப்பது பொருந்தாது. அன்பில்லாத வுடம்பு என்பு தோற்போர்ப் பென்று ஆசிரியரும் அடுத்த குறளிற் கூறுதல் காண்க.

மணக்குடவர்

உடம்பிற்கு அகத்துறுப்பாகிய அன்பிலார்க்குப் புறத்துறுப்புகளெல்லாம் யாதினைச் செய்யும்?.

புலியூர்க் கேசிகன்

உள்ளத்தின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவருக்கு, கண்ணுக்குத் தெரியும் உடம்பின் பிற உறுப்புக்கள் எல்லாம் என்ன பயனைச் செய்யும்?

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)அன்புடைமை (Anputaimai)