குறள் (Kural) - 81
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.
பொருள்
இல்லறத்தைப் போற்றி வாழ்வது, விருந்தினரை வரவேற்று, அவர்க்கு வேண்டிய உதவிகளைச் செய்வதற்காகவே.
Tamil Transliteration
Irundhompi Ilvaazhva Thellaam Virundhompi
Velaanmai Seydhar Poruttu.
மு.வரதராசனார்
வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவி செய்யும் பொருட்டே ஆகும்.
சாலமன் பாப்பையா
வீட்டில் இருந்து, பொருள்களைச் சேர்த்தும் காத்தும் வாழ்வது எல்லாம், வந்த விருந்தினரைப் பேணி அவர்களுக்கு உதவுவதற்கே ஆம்.
கலைஞர்
இல்லறத்தைப் போற்றி வாழ்வது, விருந்தினரை வரவேற்று, அவர்க்கு வேண்டிய உதவிகளைச் செய்வதற்காகவே.
பரிமேலழகர்
இல் இருந்து ஓம்பி வாழ்வது எல்லாம் - மனைவியோடு வனத்தில் செல்லாது இல்லின்கண் இருந்து பொருள்களைப் போற்றி வாழும் செய்கை எல்லாம்; விருந்து ஓம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு - விருந்தினரைப் பேணி அவர்க்கு உபகாரம் செய்தற் பொருட்டு. (எனவே, வேளாண்மை செய்யாவழி இல்லின்கண் இருத்தலும் பொருள்செய்தலும் காரணமாக வரும் துன்பச் செய்கைகட்கு எல்லாம் பயன் இல்லை என்பதாம்.)
ஞா.தேவநேயப் பாவாணர்
இல் இருந்து ஓம்பி வாழ்வது எல்லாம் - கணவனும் மனைவிபும் தம் இல்லத்தின்கண் இருந்து தம்மையும் தம் மக்களையும் தம் பொருள்களையும் பேணிக்காத்து வாழ்வதெல்லாம்; விருந்து ஓம்பி வேளாண்மை செய்தற்பொருட்டு - விருந்தினரைப் பேணி அவருக்குப் பலவகையிலும் நன்றி (உபகாரம்) செய்தற் பொருட்டே. இக் காலத்திற்போல் உண்டிச் சாலைகளும் தங்கல் விடுதிகளுமில்லாத பண்டைக் காலத்தில், பணம் பெற்றேனும், இல்லறத்தாரையன்றி விருந்தினரைப் பேண ஒருவரு மின்மையின், இல் வாழ்க்கையின் அடிப்படை நோக்கம் விருந்தோம்பலே என்றார். ' விருந்து ' பண்பாகு பெயர்.
மணக்குடவர்
இல்லின்கண் இருந்து பொருளைப் போற்றி வாழும் வாழ்க்கை யெல்லாம் வந்தவிருந்தினரைப் போற்றி அவர்க்கு உபகரித்தற்காக.
புலியூர்க் கேசிகன்
இவ்வுலகில் இருந்து, பொருளைப் பேணி, இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவுதலின் பொருட்டே ஆகும்
பால் (Paal) | அறத்துப்பால் (Araththuppaal) |
---|---|
இயல் (Iyal) | இல்லறவியல் (Illaraviyal) |
அதிகாரம் (Adhigaram) | விருந்தோம்பல் (Virundhompal) |