குறள் (Kural) - 78

குறள் (Kural) 78
குறள் #78
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.

பொருள்
மனத்தில் அன்பு இல்லாதவருடைய வாழ்க்கை, பாலைவனத்தில் பட்டமரம் தளிர்த்தது போன்றது.

Tamil Transliteration
Anpakath Thillaa Uyirvaazhkkai Vanpaarkan
Vatral Marandhalirth Thatru.

மு.வரதராசனார்

அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர் வாழக்கை வளமற்ற பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது.

சாலமன் பாப்பையா

மனத்தில்
அன்பு இல்லாமல் குடும்பத்தோடு வாழும் வாழ்க்கை, வறண்ட பாலை நிலத்தில்
காய்ந்து சுக்காகிப் போன மரம் மீண்டும் இலை விடுவது போலாம்.

கலைஞர்

மனத்தில் அன்பு இல்லாதவருடைய வாழ்க்கை, பாலைவனத்தில் பட்டமரம் தளிர்த்தது போன்றது.

பரிமேலழகர்

அகத்து அன்பு இல்லா உயிர் வாழ்க்கை - மனத்தின்கண் அன்பு இல்லாத உயிர் இல்லறத்தோடு கூடி வாழ்தல்; வன்பாற்கண் வற்றல் மரம் தளிர்த்தற்று - வன்பாலின்கண்வற்றல் ஆகிய மரம் தளிர்த்தாற் போலும். ( கூடாது என்பதாம். வன்பால் - வல்நிலம். வற்றல் என்பது பால் விளங்கா அஃறிணைப் படர்க்கைப் பெயர்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

அகத்து அன்பு இல்லா உயிர்வாழ்க்கை - உள்ளத்தில் அன்பில்லாத வுயிர் இல்லற வாழ்க்கை நடாத்துதல்; வன்பாற்கண்வற்றல் மரம் தளிர்த்த அற்று-பாலை நிலத்தின் கண் பட்டுப்போன மரம் தளிர்த்தாற் போலும். நடவாத தென்பதாம். ' வற்றல் ' தொழிலாகு பெயர். ' வற்றன் மரம்' இருபெயரொட்டு அன்னது - அற்று. அன்பில்லா மக்களை உயிர் என்றது இழிவுக் குறிப்பு.

மணக்குடவர்

தன்னிடத்து அன்பில்லாத உயிரினது வாழ்க்கை வலிய பாரிடத்து (பாறை) உண்டாகிய உலர்ந்த மரம் தளிர்த்தாற் போலும். தளிர்த்தற்குக் காரணமின்மையால் தளிராதென்றவாறு.

புலியூர்க் கேசிகன்

உள்ளத்திலே அன்பு இல்லாதவருடைய இல்வாழ்க்கையானது, வன்மையான பாலை நிலத்திலே காய்ந்த மரம் தளிர்த்தாற் போல நிலையற்றதாம்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)அன்புடைமை (Anputaimai)