குறள் (Kural) - 784

குறள் (Kural) 784
குறள் #784
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்செனறு இடித்தற் பொருட்டு.

பொருள்
நட்பு என்பது சிரித்து மகிழ்வதற்காக அல்ல; நண்பர்கள் நல்வழி தவறிச் செல்லும்பொழுது இடித்துரைத்துத் திருத்துவதற்காகும்.

Tamil Transliteration
Nakudhar Poruttandru Nattal Mikudhikkan
Mersenaru Itiththar Poruttu.

மு.வரதராசனார்

நட்புச் செய்தல் ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழும் பொருட்டு அன்று, நண்பர் நெறிக்கடந்து செல்லும் போது முற்ப்பட்டுச் சென்று இடித்துரைப்பதற்காகும்.

சாலமன் பாப்பையா

ஒருவனோடு நட்புக் கொள்வது சிரித்து மகிழ மட்டும் அன்று; நண்பனிடம் வேண்டாத செயல் இருக்கக் கண்டபோது விரைந்து கண்டித்துப் புத்தி சொல்வதற்கும் ஆம்.

கலைஞர்

நட்பு என்பது சிரித்து மகிழ்வதற்காக அல்ல; நண்பர்கள் நல்வழி தவறிச் செல்லும்பொழுது இடித்துரைத்துத் திருத்துவதற்காகும்.

பரிமேலழகர்

நட்டல் நகுதற்பொருட்டன்று - ஒருவனோடு, ஒருவன் நட்புச் செய்தல் தம்முள் நகுதற்கு இயைந்தன சொல்லி நகையாடற் பொருட்டன்று; மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற் பொருட்டு - அவர்க்கு வேண்டாத செய்கை உளதாயவழி முற்பட்டுக் கழறுதற் பொருட்டு. (பழியும் பாவமும் தரும் செய்கை துன்பமே பயத்தலான் வேண்டப்படுவதன்மையின் அதனை 'மிகுதி' என்றும், அது செய்தற்கு முன்னே மீட்டல் வேண்டுதலின், 'மேற்சென்று' என்றும், இன்சொற்கு மீளாமையின், 'இடித்தற்பொருட்டு' என்றும் கூறினார். இதனான் நட்பின் பயன் கூறப்பட்டது.)

புலியூர்க் கேசிகன்

நட்புச் செய்து கொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அன்று; அவர் மிகுதியாகத் தவறு செய்யும் போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)நட்பியல் (Natpiyal)
அதிகாரம் (Adhigaram)நட்பு (Natpu)