குறள் (Kural) - 783

குறள் (Kural) 783
குறள் #783
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.

பொருள்
படிக்கப் படிக்க இன்பம் தரும் நூலின் சிறப்பைப் போல் பழகப் பழக இன்பம் தரக்கூடியது பண்புடையாளர்களின் நட்பு.

Tamil Transliteration
Navildhorum Noolnayam Polum Payildhorum
Panputai Yaalar Thotarpu.

மு.வரதராசனார்

பழகப் பழக நற்பண்பு உடையவரின் நட்பு இன்பம் தருதல், நூலின் நற்பொருள் கற்கக் கற்க மேன்மேலும் இன்பம் தருதலைப் போன்றதாகும்.

சாலமன் பாப்பையா

படிக்கும்போது எல்லாம் மகிழ்ச்சி தரும் நூலின் இன்பம் போல நல்ல குணமுள்ளவரோடு கொண்ட நட்பு அவரோடு பழகும் போதெல்லாம் மகிழ்ச்சி தரும்.

கலைஞர்

படிக்கப் படிக்க இன்பம் தரும் நூலின் சிறப்பைப் போல் பழகப் பழக இன்பம் தரக்கூடியது பண்புடையாளர்களின் நட்பு.

பரிமேலழகர்

பண்பு உடையாளர் தொடர்பு பயில்தொறும் - நற்குணமுடைய மக்கள் தம்முள் செய்த நட்புப் பயிலுந்தோறும் அவர்க்கு இன்பஞ் செய்தல்; நூல் நவில்தொறும் நயம் போலும் - நூற்பொருள் கற்குந்தோறும் கற்றார்க்கு இன்பஞ் செய்தலை ஒக்கும். (நயத்தினைச் செய்தலான் 'நயம்' எனப்பட்டது. இருமையினும் ஒருகாலைக் கொருகால் மிகும் என்பதாகும். இவை இரண்டு பாட்டானும் அச்சிறப்பிற்கு ஏது கூறப்பட்டது.)

புலியூர்க் கேசிகன்

நல்ல பண்பு உடையவர்களின் தொடர்பானது, படிக்கப் படிக்க நூலின் நயம் மேன்மேலும் இனிமை தருவது போல், பழகப் பழக மேன்மேலும் இன்பம் தருவதாகும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)நட்பியல் (Natpiyal)
அதிகாரம் (Adhigaram)நட்பு (Natpu)