குறள் (Kural) - 77

குறள் (Kural) 77
குறள் #77
என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.

பொருள்
அறம் எதுவென அறிந்தும் அதனைக் கடைப்பிடிக்காதவரை, அவரது மனச்சாட்சியே வாட்டி வதைக்கும் அது வெயிலின் வெம்மை புழுவை வாட்டுவதுபோல இருக்கும்.

Tamil Transliteration
Enpi Ladhanai Veyilpolak Kaayume
Anpi Ladhanai Aram.

மு.வரதராசனார்

எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவது போல் அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும்.

சாலமன் பாப்பையா

எலும்பு இல்லாத புழுவை வெயில் காய்ந்து கொள்வது போல அன்பு இல்லாத உயிரை அறக்கடவுள் காய்ந்து கொல்லும்.

கலைஞர்

அறம்
எதுவென அறிந்தும் அதனைக் கடைப்பிடிக்காதவரை, அவரது மனச்சாட்சியே வாட்டி
வதைக்கும். அது வெயிலின் வெம்மை புழுவை வாட்டுவதுபோல இருக்கும்.

பரிமேலழகர்

என்பு இலதனை வெயில் போலக் காயும் - என்பு இல்லாத உடம்பை வெயில் காய்ந்தாற்போலக்காயும்; அன்பு இலதனை அறம் - அன்பில்லாத உயிரை அறக்கடவுள். ('என்பிலது' என்றதனான் உடம்பு என்பதூஉம் 'அன்பிலது' என்றதனான் உயிர் என்பதூஉம் பெற்றாம். வெறுப்பு இன்றி எங்கும் ஒருதன்மைத்து ஆகிய வெயிலின்முன் என்பில்லது தன் இயல்பாற் சென்று கெடுமாறுபோல, அத்தன்மைத்து ஆகிய அறத்தின்முன் அன்பில்லது தன் இயல்பால் கெடும் என்பதாம்.அதனைக் காயும் என வெயில் அறங்களின் மேல் ஏற்றினார், அவற்றிற்கும் அவ்வியல்பு உண்மையின். இவ்வாறு 'அல்லவை செய்வார்க்கு அறம் கூற்றம்' (நான்மணி.83) எனப் பிறரும் கூறினார்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

அறம் - அறத் தெய்வம்; அன்பு இலதனை - அன்பில்லாத உயிரை; என்பு இலதனை வெயில் போலக் காயும் - எலும்பில்லாத வுடம்பை வெயில் எரித்தாற் போல் எரிக்கும். எலும்பில்லாத வுடம்பு பூச்சி புழுக்களுடையன. அன்பில்லாதவுயிர் என்றது மக்களுயிரை. வெயில் வந்தபோது எலும்பில்லா வுடம்பு துன்புறுவதுபோல. வினைப்பயன் வந்தபோது அன்பு செய்யா மக்களுயிர் துன்புறும் என்பது. அன்பு செய்யாமையாவது அதற்கு மறுதலையான தீமை செய்தல். "அறம் பிழைத்தோர்க்கு அறங் கூற்ற மாவது" என்றார் இளங்கோவடிகள் (சிலப். பதிகம்.) "அல்லவை செய்வார்க் கறங் கூற்றம்" என்றார் விளம்பிநாகனார் (நான்மணி 83). மக்களை உயிர் என்றது அன்பின்மையாகிய இழிவு பற்றி.

மணக்குடவர்

என்பிலாத சீவனை வெயில் சுடுமாறு போற் சுடும்: அன்பிலாதவுயிரினை அறம்.

புலியூர்க் கேசிகன்

எலும்பில்லாத புழுப்பூச்சிகளை வெயில் காய்ந்து வருத்துவது போல, அன்பில்லாதவனை அறமானது காய்ந்து வருந்தச் செய்யும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)அன்புடைமை (Anputaimai)