குறள் (Kural) - 771

குறள் (Kural) 771
குறள் #771
என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
முன்நின்று கல்நின் றவர்.

பொருள்
போர்களத்து வீரன் ஒருவன், ``பகைவயர்களே என் தலைவனை எதிர்த்து நிற்காதீர்; அவனை எதிர்த்து நடுகல்லாய்ப் போனவர்கள் பலர்'' என முழங்குகிறான்.

Tamil Transliteration
Ennaimun Nillanmin Thevvir Palarennai
Munnindru Kalnin Ravar.

மு.வரதராசனார்

பகைவரே! என்னுடைய தலைவர் முன் எதிர்த்து நிற்காதீர்கள், என்னுடைய தலைவர் முன் எதிர்த்து நின்று கல்வடிவாய் நின்றவர் பலர்.

சாலமன் பாப்பையா

பகைவர்கேள! என் அரசின் முன்னே போரிட நிற்காதீர்; உங்களைப் போலவே இதற்கு முன்பு பலர் நின்றனர்; எல்லாம் மறைந்து இப்போது நடுகல்லில் சிலையாக நிற்கின்றனர்.

கலைஞர்

போர்களத்து வீரன் ஒருவன், பகைவர்களே என் தலைவனை எதிர்த்து நிற்காதீர்; அவனை எதிர்த்து நடுகல்லாய்ப் போனவர்கள் பலர் என முழங்குகிறான்.

பரிமேலழகர்

தெவ்விர் என் ஐ முன் நின்று கல் நின்றவர் பலர் - பகைவீர்,இன்று இங்கு என் தலைவன் எதிர் போரேற்று நின்று அவன் வேல்வாய் வீழ்ந்து பின் கல்லின்கண்ணே நின்ற வீரர் பலர்; என் ஐ முன் நில்லன்மின் - நீவிர் அதன்கணின்றி நும் உடற்கண் நிற்றல் வேண்டின் என் தலைவனெதிர் போரேற்று நிற்றலை ஒழிமின். ('என் ஐ' எனத் தன்னோடு தொடர்புபடுத்துக் கூறினமையின், அவன் வேல்வாய் வீழ்தல் பெற்றாம். கல் - நடுகல். 'நம்பன் சிலை வாய் நடக்குங்கணைமிச்சில் அல்லால் - அம்பொன் முடிப்பூண் அரசுமிலை',(சீவக.காந்தர்வ.317) என, பதுமுகன் கூறினாற் போல ஒரு வீரன், தன் மறம் அரசன்மேல் வைத்துக் கூறியவாறு. இப்பாட்டு 'நெடுமொழி வஞ்சி'.

புலியூர்க் கேசிகன்

பகைவரே! என் தலைவனின் முன்னே எதிர்த்து வந்து நில்லாதீர்; அவன் முன்னர் எதிர்த்து வந்து நின்று, களத்தில் வீழ்ந்துபட்டு, நடுகற்களாக நிற்பவர் மிகப் பலர்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)படையியல் (Padaiyil)
அதிகாரம் (Adhigaram)படைச் செருக்கு (Pataichcherukku)