குறள் (Kural) - 770
நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல்.
பொருள்
உறுதிவாய்ந்த வீரர்களை அதிகம் உடையதாக இருந்தாலும் தலைமை தாங்கும் தலைவர்கள் இல்லாவிட்டால் அந்தப் படை நிலைத்து நிற்க முடியாது.
Tamil Transliteration
Nilaimakkal Saala Utaiththeninum Thaanai
Thalaimakkal Ilvazhi Il.
மு.வரதராசனார்
நெடுங்காலமாக நிலைத்திருக்கும் வீரர் பலரை உடையதே ஆனாலும், தலைமைதாங்கும் தலைவர் இல்லாத போது படைக்குப் பெருமை இல்லையாகும்.
சாலமன் பாப்பையா
சிறந்த வீரர்கள் அதிகம் இருந்தாலும், படைக்கு நல்ல தலைவன் இல்லை என்றால் அந்தப் படை போரில் நிலைத்து நிற்காது.
கலைஞர்
உறுதிவாய்ந்த வீரர்களை அதிகம் உடையதாக இருந்தாலும் தலைமை தாங்கும் தலைவர்கள் இல்லாவிட்டால் அந்தப் படை நிலைத்து நிற்க முடியாது.
பரிமேலழகர்
நிலை மக்கள் சால உடைத்து எனினும் - போரின்கண் நிலையுடைய வீரரை மிக உடைத்தே யாயினும்; தலைமக்கள் இல்வழித் தானை இல் - தனக்குத் தலைவராகிய வீரர் இல்லாதவழித் தானை நில்லாது. (படைத்தலைவர் நிலையுடையரன்றிப் போவாராயின், காண்போர் இல்லெனப் பொராது தானும் போம் என்பார், 'தலைமக்கள் இல் வழி இல்' என்றார். இவை மூன்று பாட்டானும் முறையே படைத்தகையின்மையானும் அரசன் கொடைத் தாழ்வுகளானும், தலைவர் இன்மையானும் தாழ்வு கூறப்பட்டது.)
புலியூர்க் கேசிகன்
நிலையான மறவர்களை மிகுதியாக உடையதானாலும், ஒரு படையானது, தன் தலைவர்கள் திறமையில்லாதவர்களாக இருந்தால், பயனற்று அழிந்துவிடும்
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | படையியல் (Padaiyil) |
அதிகாரம் (Adhigaram) | படை மாட்சி (Pataimaatchi) |