குறள் (Kural) - 76

குறள் (Kural) 76
குறள் #76
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.

பொருள்
வீரச் செயல்களுக்கும் அன்பு துணையாகத் திகழ்கிறது என்பதை அறியாதவர்களே, அறச் செயல்களுக்கு மட்டுமே அன்பு துணையாக இருப்பதாகக் கூறுவார்கள்.

Tamil Transliteration
Araththirke Anpusaar Penpa Ariyaar
Maraththirkum Aqdhe Thunai.

மு.வரதராசனார்

அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்:ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்க்கும் அதுவே துணையாக நிற்கின்றது.

சாலமன் பாப்பையா

அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவோர் அறியாதவரே; மறத்திற்கும் கூட அதுவே காரணம் ஆகும்.

கலைஞர்

வீரச்
செயல்களுக்கும் அன்பு துணையாகத் திகழ்கிறது என்பதை அறியாதவர்களே, அறச்
செயல்களுக்கு மட்டுமே அன்பு துணையாக இருப்பதாகக் கூறுவார்கள்.

பரிமேலழகர்

அன்பு சார்பு அறத்திற்கே என்ப அறியார் - அன்பு துணையாவது அறத்திற்கே என்று சொல்லுவர் சிலர் அறியார்; மறத்திற்கும் அஃதே துணை - ஏனை மறத்திற்கும் அவ்வன்பே துணையாவது. (ஒருவன் செய்த பகைமைபற்றி உள்ளத்து மறம் நிகழ்ந்துழி, அவனை நட்பாகக் கருதி அவன் மேல் அன்புசெய்ய அது நீங்குமாகலின்,மறத்தை நீக்குதற்கும் துணையாம் என்பார், 'மறத்திற்கும் அஃதே துணை' என்றார். துன்பத்திற்கு யாரே துணையாவார் (குறள் 1299)என்புழிப்போல. இவை ஐந்து பாட்டானும் அன்பினது சிறப்புக் கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

அன்பு அறத்திற்கே சார்பு என்ப - அன்பு அறத்திற்கே துணையாவது என்று சிலர் சொல்வர்; அறியார் - அவர் அறியார்; மறத்திற்கும் அஃதே துணை - அதன் மறுதலையான மறத்திற்கும் அவ்வன்பே துணையாவது. அறம் மறம் என்பன இங்கு நல் வினை தீவினை என்று பொருள்படும் எதிர்ச் சொற்கள். அன்பு மறத்திற்குத் துணை என்பது, இஞ்சி பித்தத்திற்கு நல்லது என்பது போல்வது. "மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம் தகுதியான் வென்று விடல்". (158) "இன்னாசெய் தாரை யொறுத்த லவர்நாண நன்னயஞ் செய்து விடல்". (314) என்னுங் குறள்கள் இங்குக் கவனிக்கத்தக்கன. ஒரு பகைவனுக்கு நன்மை செய்தவிடத்து அவன் நாணித் தன் பகைமையைவிட்டு நட்பாவது இயல்பாதலின், "மறத்திற்கு மஃதே துணை" என்றார். ஒருவன் தன் மனைவி மக்கள் மேலுள்ள அன்பினால், அவரைக் காத்தற்குத் தீயவழிகளிலும் பொருள் தேடுதல் உலகத்து நிகழ்தலால், அதனையே மறத்திற்கு மஃதே துணை என்று குறித்தார் என்று உரை கூறுவாருமுளர். அகப்பற்றால் தீமை செய்வது போன்றதே புறப்பற்றால் தீமை செய்வது மாதலானும், தீமைக்குத் துணைசெய்வது அறத்தோடு பொருந்தாமையாலும், அது உரையன்மை அறிக.

மணக்குடவர்

அன்பானது அறஞ்செய்வார்க்கே சார்பாமென்பர் அறியாதார். அவ்வன்பு மறஞ் செய்வார்க்குந் துணையாம்.

புலியூர்க் கேசிகன்

அறத்திற்கே அன்பு துணையாகும் என்று சொல்பவர் அறியாதவர்; ஆராய்ந்தால் மறச்செய்கைகளுக்கும் அன்பே துணையாயிருக்கும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)அன்புடைமை (Anputaimai)