குறள் (Kural) - 75

குறள் (Kural) 75
குறள் #75
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.

பொருள்
உலகில் இன்புற்று வாழ்கின்றவர்க்கு வாய்க்கும் சிறப்பு, அவர் அன்புள்ளம் கொண்டவராக விளங்குவதன் பயனே என்று கூறலாம்.

Tamil Transliteration
Anputru Amarndha Vazhakkenpa Vaiyakaththu
Inputraar Eydhum Sirappu.

மு.வரதராசனார்

உலகத்தில் இன்பம் உற்று வாழ்கின்றவர் அடையும் சிறப்பு, அன்பு உடையவராகிப் பொருந்தி வாழும் வாழ்கையின் பயன் என்று கூறுவர்.

சாலமன் பாப்பையா

இவ்வுலகில் வாழ்ந்து இன்பம் அடைந்தவர் பெறும் சிறப்பே அன்பு கொண்டு இல்வாழ்க்கை நடத்தியதன் பயன்தான் என்று அறிந்தோர் கூறுவர்.

கலைஞர்

உலகில் இன்புற்று வாழ்கின்றவர்க்கு வாய்க்கும் சிறப்பு, அவர் அன்புள்ளம் கொண்டவராக விளங்குவதன் பயனே என்று கூறலாம்.

பரிமேலழகர்

அன்பு உற்று அமர்ந்த வழக்கு என்ப - அன்புடையராய் இல்லறத்தோடு பொருந்திய நெறியின் பயன் என்று சொல்லுவர் அறிந்தோர்; வையகத்து இன்பு உற்றார் எய்தும் சிறப்பு - இவ்வுலகத்து இல்வாழ்க்கைக்கண் நின்று, இன்பம் நுகர்ந்து, அதன்மேல் துறக்கத்துச் சென்று எய்தும் பேரின்பத்தினை. ('வழக்கு' ஆகுபெயர். இல்வாழ்க்கைக்கண் நின்று மனைவியோடும் மக்களோடும் ஒக்கலோடும் கூடி இன்புற்றார் தாம் செய்த வேள்வித்தொழிலால் தேவராய் ஆண்டும் இன்புறுவர் ஆகலின் இன்புற்றார் எய்தும் சிறப்பு என்றார்.தவத்தால் துன்புற்று எய்தும் துறக்க இன்பத்தினை ஈண்டு இன்புற்று எய்துதல் அன்பானன்றி இல்லை என்பதாம்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு - இவ்வுலகத்து இல்லறத்தில் நின்று இன்பம் நுகர்ந்தவர் மறுமையில் தேவருருலகஞ் சென்று அடையும் சிறந்த இன்பத்தை; அன்பு உற்று அமர்ந்த வழக்கு என்ப - அவர் முன்பு இங்கு அன்பொடு பொருந்த வாழ்ந்த நெறியின் பயன் என்று சொல்வர் அறிந்தோர். ' வழக்கு ' என்பது ஆகுபொருளது. இல்லறத்தினாலேயே இம்மையில் இவ்வுலக இன்பமும் மறுமையில் விண்ணுலக வின்பமும் பெறுவதற்குக் கரணியமாயிருப்பது அன்பு ஒன்றே என்பது இங்குக் கூறப்பட்டது.

மணக்குடவர்

முற்பிறப்பின்கண் பிறர்மேலன்பு வைத்துச் சென்ற செலவென்று சொல்லுவர்: இப்பிறப்பின்கண் உலகத்தில் இன்பமுற்றார் அதன் மேலுஞ் சிறப்பெய்துதலை.

புலியூர்க் கேசிகன்

இவ்வுலகத்திலே இன்பம் அடைந்தவர் அடையும் சிறப்பு, அவர் அன்புடையவராகப் பொருந்தி வாழ்ந்த வாழ்க்கையின் பயனே என்பர்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)அன்புடைமை (Anputaimai)