குறள் (Kural) - 74
அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பு என்னும் நாடாச் சிறப்பு.
பொருள்
அன்பு பிறரிடம் பற்றுள்ளம் கொள்ளச் செய்யும் அந்த உள்ளம், நட்பு எனும் பெருஞ்சிறப்பை உருவாக்கும்.
Tamil Transliteration
Anpu Eenum Aarvam Utaimai Adhueenum
Nanpu Ennum Naataach Chirappu.
மு.வரதராசனார்
அன்பு பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்: அஃது எல்லாரிடத்தும் நட்பு என்றுசொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும்.
சாலமன் பாப்பையா
குடும்பம்,
உறவு என்பாரிடத்துக் கொள்ளும் அன்பு, உலகத்தவரிடம் எல்லாம் உறவு கொள்ளும்
விருப்பை உண்டாக்கும். அதுவே அனைவரையும் நட்பாக்கும் சிறப்பையும்
உண்டாக்கும்.
கலைஞர்
அன்பு பிறரிடம் பற்றுள்ளம் கொள்ளச் செய்யும் அந்த உள்ளம், நட்பு எனும் பெருஞ்சிறப்பை உருவாக்கும்.
பரிமேலழகர்
அன்பு ஆர்வமுடைமை ஈனும் - ஒருவனுக்குத் தொடர்புடையார் மாட்டுச் செய்த அன்பு அத்தன்மையால் பிறர் மாட்டும் விருப்பமுடைமையைத் தரும்; அது நண்பு என்னும் நாடாச்சிறப்பு ஈனும் - அவ்விருப்பமுடைமைதான்.அவற்குப் பகையும் நொதுமலும் இல்லையாய் யாவரும் நண்பு என்று சொல்லப்படும் அளவறந்த சிறப்பினைத் தரும்.(உடைமை, உடையனாம் தன்மை. யாவரும் நண்பாதல் எல்லாப் பொருளும் எய்துதற்கு ஏதுவாகலின், அதனை 'நாடாச்சிறப்பு' என்றார்.)
ஞா.தேவநேயப் பாவாணர்
அன்பு ஆர்வமுடைமை ஈனும் - உறவினரிடத்துச் செய்யும் அன்பு ஒருவனுக்குப் பிறரிடத்தும் விருப்பத்தை உண்டாக்கும்; அது நண்பு என்னும் நாடாச் சிறப்பு ஈனும் - அது நாளடைவில் எல்லாரையும் நட்பாக்கி எல்லாப் பொருள்களும் எளிதாய்க் கிடைக்கக் கூடிய நல்ல நிலைமையை உண்டு பண்ணும். நாடாமை வருந்தித் தேடாமை
மணக்குடவர்
அன்பு தரும் ஆர்வமுடைமையை அவ்வார்வமுடைமை தரும். நட்பென்று சொல்லப்பட்ட ஆராய்தலில்லாத சிறப்பினை.
புலியூர்க் கேசிகன்
அன்பானது பிறர்பால் ஆர்வம் உடையவராகும் பண்பைத் தரும்
பால் (Paal) | அறத்துப்பால் (Araththuppaal) |
---|---|
இயல் (Iyal) | இல்லறவியல் (Illaraviyal) |
அதிகாரம் (Adhigaram) | அன்புடைமை (Anputaimai) |