குறள் (Kural) - 73
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.
பொருள்
உயிரும் உடலும்போல் அன்பும் செயலும் இணைந்திருப்பதே உயர்ந்த பொருத்தமாகும்.
Tamil Transliteration
Anpotu Iyaindha Vazhakkenpa Aaruyirkku
Enpotu Iyaindha Thotarpu.
மு.வரதராசனார்
அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன்என்று கூறுவர்.
சாலமன் பாப்பையா
பெறுவதற்கு அரிய உயிருக்கு நம் உடம்போடு உண்டாகிய தொடர்பு, அன்போடு கொண்ட ஆசையின் பயனே என்று அறிந்தவர் கூறுவர்.
கலைஞர்
உயிரும் உடலும்போல் அன்பும் செயலும் இணைந்திருப்பதே உயர்ந்த பொருத்தமாகும்.
பரிமேலழகர்
ஆர் உயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு - பெறுதற்கு அரிய மக்கள் உயிர்க்கு உடம்போடு உண்டாகிய தொடர்ச்சியினை; அன்போடு இயைந்த வழக்கு என்ப - அன்போடு பொருந்துதற்கு வந்த நெறியின் பயன் என்று சொல்லுவர் அறிந்தோர். (பிறப்பினது அருமை பிறந்த உயிர்மேல் ஏற்றப்பட்டது. 'இயைந்த' என்பது உபசார வழக்கு; வழக்கு: ஆகுபெயர். உடம்போடு இயைந்தல்லது அன்பு செய்யலாகாமையின், அது செய்தற் பொருட்டு இத்தொடர்ச்சி உளதாயிற்று என்பதாம். ஆகவே இத்தொடர்ச்சிக்குப் பயன் அன்புடைமை என்றாயிற்று.)
ஞா.தேவநேயப் பாவாணர்
ஆர் உயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு - பெறுதற்கரிய மக்களுயிர்க்கு உடம்போடு பொருந்திய தொடர்பை;அன்பொடு இயைந்த வழக்கு என்ப - அன்பு செய்தற்கு ஏற்பட்ட நெறியின் பயன் என்று கூறுவர் அறிவுடையோர். வழக்கு என்பது வழங்கும் நெறி, அஃது இங்கு அதன் பயனைக் குறித்தது. ' அன்பு ' ஆகுபெயர். அன்பு செய்தலே மக்கட் பிறப்பின் நோக்கமும் பயனும் என்பது இங்குக் கூறப்பட்டது.
மணக்குடவர்
முற்பிறப்பின்கண் அன்போடு பொருந்தச் சென்ற செலவென்று சொல்லுவர்; பெறுதற்கரிய வுயிர்க்கு இப்பிறப்பின்கண் உடம்போடு இடைவிடாத நட்பினை.
புலியூர்க் கேசிகன்
அருமையான உயிருக்கு உடம்போடு பொருந்திய தொடர்பானது, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கைக்காகவே என்பர் சான்றோர்
பால் (Paal) | அறத்துப்பால் (Araththuppaal) |
---|---|
இயல் (Iyal) | இல்லறவியல் (Illaraviyal) |
அதிகாரம் (Adhigaram) | அன்புடைமை (Anputaimai) |