குறள் (Kural) - 728

குறள் (Kural) 728
குறள் #728
பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
நன்கு செலச்சொல்லா தார்.

பொருள்
அறிவுடையோர் நிறைந்த அவையில், அவர்கள் மனத்தில் பதியும் அளவுக்குக் கருத்துக்களைச் சொல்ல இயலாவிடின், என்னதான் நூல்களைக் கற்றிருந்தாலும் பயன் இல்லை.

Tamil Transliteration
Pallavai Katrum Payamilare Nallavaiyul
Nanku Selachchollaa Thaar.

மு.வரதராசனார்

நல்ல அறிஞரின் அவையில் நல்லப் பொருளைக் கேட்பவர் மனதில் பதியுமாறு சொல்ல முடியாதவர், பல நூல்களைக் கற்றாலும் பயன் இல்லாதவரே.

சாலமன் பாப்பையா

நல்லனவற்றை நல்லவர் கூடிய அவையில் அவர் மனங் கொள்ளச் சொல்லத் தெரியாதவர், பலதுறை நூல்களைக் கற்றிருந்தாலும் உலகிற்குப் பயன்படாதவரே.

கலைஞர்

அறிவுடையோர் நிறைந்த அவையில், அவர்கள் மனத்தில் பதியும் அளவுக்குக் கருத்துக்களைச் சொல்ல இயலாவிடின், என்னதான் நூல்களைக் கற்றிருந்தாலும் பயன் இல்லை.

பரிமேலழகர்

நல்லவையுள் நன்கு செலச் சொல்லாதார் - நல்லார் இருந்த அவைக்கண் நல்ல சொற்பொருள்களைத் தம் அச்சத்தான் அவர்க்கு ஏற்கச் சொல்லமாட்டாதார்; பல்லவை கற்றும் பயம் இலரே - பல நூல்களைக் கற்றாராயினும் உலகிற்குப் பயன்படுதல் இலர். (அறிவார் முன் சொல்லாமையின் கல்வியுண்மை அறிவாரில்லை என்பதாம். இனிப் 'பயமிலர்' என்பதற்கு, 'கல்விப் பயனுடையரல்லர்' என்று உரைப்பாரும் உளர்.)

புலியூர்க் கேசிகன்

நல்லவர்கள் அவையிலே, அவர்கள் ஏற்றுக் கொள்ளும்படி நல்ல பொருள்பற்றிப் பேசத் தெரியாதவர்கள் பலவகையான நூல்களைக் கற்றவரானாலும் பயன் இல்லாதவரே!

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அமைச்சியல் (Amaichiyal)
அதிகாரம் (Adhigaram)அவை அஞ்சாமை (Avaiyanjaamai)