குறள் (Kural) - 727
பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சு மவன்கற்ற நூல்.
பொருள்
அவை நடுவில் பேசப் பயப்படுகிறவன், என்னதான் அரிய நூல்களைப் படித்திருந்தாலும் அந்த நூல்கள் அனைத்தும் போர்க்களத்தில் ஒரு பேடியின் கையில் உள்ள கூர்மையான வாளைப் போலவே பயனற்றவைகளாகி விடும்.
Tamil Transliteration
Pakaiyakaththup Petikai Olvaal Avaiyakaththu
Anju Mavankatra Nool.
மு.வரதராசனார்
அவையினிடத்தில் அஞ்சுகின்றவன் கற்ற நூல், பகைவரின் போர்க்களத்தில் அஞ்சுகின்ற பேடியின் கையில் உள்ள கூர்மையான வாள் போன்றது.
சாலமன் பாப்பையா
கற்றவர் கூடிய அவையில் பேசப் பயப்படுபவன் கற்ற நூல், பகைமுன்னே நடுங்கும் பேடியின் கையில் இருக்கும் வாளுக்குச் சமம்.
கலைஞர்
அவை நடுவில் பேசப் பயப்படுகிறவன், என்னதான் அரிய நூல்களைப் படித்திருந்தாலும் அந்த நூல்கள் அனைத்தும் போர்க்களத்தில் ஒரு பேடியின் கையில் உள்ள கூர்மையான வாளைப் போலவே பயனற்றவைகளாகி விடும்.
பரிமேலழகர்
பகையத்துப் பேடி கை ஓள்வாள் - எறியப்படும் பகை நடுவண் அதனை அஞ்சும் பேடி பிடித்த கூர்வாளை ஒக்கும்; அவையகத்து அஞ்சுமவன் கற்ற நூல் - சொல்லப்படும் அவை நடுவண் அதனை அஞ்சுமவன் கற்ற நூல்.(பேடி : பெண் இயல்பு மிக்கு ஆண் இயல்பும் உடையவள்.களமும் வாய்த்துத் தானும் நன்றாய் இருந்ததேயாயினும் பிடித்தவள் குற்றத்தால் வாள் சிறப்பின்றாயினாற் போல, அவையும் வாய்த்துத் தானும் நன்றாய் இருந்ததேயாயினும், கற்றவன் குற்றத்தால் நூல் சிறப்பின்றா யிற்று.)
புலியூர்க் கேசிகன்
பகைவர் நடுவே புகுந்த, பேடியின் கையிலேயுள்ள கூர்மையான வாள் பயன்படாததைப் போல, அவையில் பேசுவதற்கு அஞ்சுகிறவன் நூலறிவும் பயன்படாது
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | அமைச்சியல் (Amaichiyal) |
அதிகாரம் (Adhigaram) | அவை அஞ்சாமை (Avaiyanjaamai) |