குறள் (Kural) - 716

குறள் (Kural) 716
குறள் #716
ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு.

பொருள்
அறிவுத்திறனால் பெருமை பெற்றோர் முன்னிலையில் ஆற்றிடும் உரையில் குற்றம் ஏற்படுமானால், அது ஒழுக்க நெறியிலிருந்து தளர்ந்து வீழ்ந்து விட்டதற்கு ஒப்பானதாகும்.

Tamil Transliteration
Aatrin Nilaidhalarn Thatre Viyanpulam
Etrunarvaar Munnar Izhukku.

மு.வரதராசனார்

விரிவான அறிவுத்துறைகளை அறிந்து உணர்கின்றவரின் முன்னே குற்றப்படுதல், ஒழுக்கநெறியிலிருந்து நிலைத் தளர்ந்து கெடுவதைப் போன்றதாகும்.

சாலமன் பாப்பையா

பலதுறை நூல்பொருள்களைக் கேட்டு உணரும் திறம் மிக்கவர்முன்னே ஆற்றல்மிக்க பேச்சாளன் சொல்லால் சிறுமைப்படுவது மேலான நெறியிலிருந்து நிலைதவறி விழுவதைப் போல ஆகும்.

கலைஞர்

அறிவுத்திறனால் பெருமை பெற்றோர் முன்னிலையில் ஆற்றிடும் உரையில் குற்றம் ஏற்படுமானால், அது ஒழுக்க நெறியிலிருந்து தளர்ந்து வீழ்ந்து விட்டதற்கு ஒப்பானதாகும்.

பரிமேலழகர்

ஆற்றின் நிலை தளர்ந்தற்று - வீடு எய்தற்பொருட்டு நன்னெறிக்கண் நின்றானொருவன் அந்நெறியினின்றும் நிலை தளர்ந்து வீழ்ந்தாலொக்கும்; வியன் புலம் ஏற்று உணர்வார் முன்னர் இழுக்கு - அகன்ற நூற்பொருள்களை உட்கொண்டு அவற்றின் மெய்ம்மையை உணரவல்லார் அவைக்கண் வல்லானொருவன் சொல் இழுக்குப்படுதல். (நிலை தளர்ந்து வீழ்தல் 'உரன் என்னும் தோட்டியான் ஓரைந்தும்' (குறள்.24) காத்தொழுகியான்,பின் இழுக்கிக் கூடா ஒழுக்கத்தினால் பயன் இழத்தலே அன்றி இகழவும்படும் என்பதாம். இதனான் அதன்கண் இழுக்கியவழிப்படும் குற்றம் கூறப்பட்டது.)

புலியூர்க் கேசிகன்

விரிந்த அறிவு நுட்பங்களை அறிந்தவர் முன் சென்று பேசிக் குற்றப்படுதல், ஆற்று வெள்ளத்தில் நீந்துபவன், இடையிலே நிலை தளர்ந்தால் போன்றதாம்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அமைச்சியல் (Amaichiyal)
அதிகாரம் (Adhigaram)அவை அறிதல் (Avaiyaridhal)