குறள் (Kural) - 715
நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு.
பொருள்
அறிவாளிகள் கூடியிருக்கும் இடத்தில் முந்திரிக் கொட்டை போல் பேசாமல் இருக்கிற அடக்கமானது எல்லா நலன்களிலும் சிறந்த நலனாகும்.
Tamil Transliteration
Nandrendra Vatrullum Nandre Mudhuvarul
Mundhu Kilavaach Cherivu.
மு.வரதராசனார்
அறிவு மிகுந்தவரிடையே முந்திச் சென்று பேசாத அடக்கம் ஒருவனுக்கு நன்மை என்று சொல்லப்பட்டவை எல்லாவற்றிலும நல்லது.
சாலமன் பாப்பையா
தன் அறிவினுக்கும் மேலான அறிஞர் கூடியுள்ள அவையில் அவர் பேசுவதற்கு முன்பாகப் பேசாமல் அடங்கி இருப்பது, நல்லது என்று சொல்லப்பட்ட குணங்களுள் எல்லாம் நல்லது.
கலைஞர்
அறிவாளிகள் கூடியிருக்கும் இடத்தில் முந்திரிக் கொட்டை போல் பேசாமல் இருக்கிற அடக்கமானது எல்லா நலன்களிலும் சிறந்த நலனாகும்.
பரிமேலழகர்
நன்று என்றவற்றுள்ளும் நன்றே - ஒருவற்கு இது நன்று என்று சிறப்பித்துச் சொல்லப்பட்ட குணங்கள் எல்லாவற்றுள்ளும் நன்றே; முதுவருள் முந்து கிளவாச் செறிவு - தம்மின் மிக்கார் அவைக்கண் அவரின் முற்பட்டு ஒன்றனைச் சொல்லாத அடக்கம். (தம் குறைவும், அவர் மிகுதியும், முந்து கிளர்ந்தாற் படும் இழுக்கும், கிளவாக்கால் எய்தும் நன்மையும் அறிந்தே அடங்கினமையின், அவ்வடக்கத்தினை 'நன்று என்றவற்றுள்ளும் நன்று' என்றார்.முன் கிளத்தலையே விலக்கினமையின், உடன் கிளத்தலும் பின் கிளத்தலும்ஆம் என்பது பெற்றாம். இதனான் மிக்கார் அவைக்கண்செய்யும் திறம் கூறப்பட்டது.)
புலியூர்க் கேசிகன்
அறிவால் முதிர்ந்தவர் அவையிலே, அவர்கள் கருத்துக்களைக் கேட்டறியும் முன்பாக எதையும் சொல்லாத அடக்கமானது, சிறந்த நன்மை தருவதாகும்
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | அமைச்சியல் (Amaichiyal) |
அதிகாரம் (Adhigaram) | அவை அறிதல் (Avaiyaridhal) |