குறள் (Kural) - 707

முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும்.
பொருள்
உள்ளத்தில் உள்ள விருப்பு வெறுப்புகளை முந்திக் கொண்டு வெளியிடுவதில் முகத்தைப் போல அறிவு மிக்கது வேறெதுவுமில்லை.
Tamil Transliteration
Mukaththin Mudhukkuraindhadhu Unto Uvappinum
Kaayinum Thaanmun Thurum.
மு.வரதராசனார்
ஒருவன் விருப்பம் கொண்டாலும், வெறுப்புக் கொண்டாலும் அவனுடைய முகம் முற்ப்பட்டு அதைத் தெரிவிக்கும், அம் முகத்தைவிட அறிவு மிக்கது உண்டோ.
சாலமன் பாப்பையா
ஒருவன் மனத்தால் விரும்பினாலும் வெறுத்தாலும் அதை வெளிக்காட்டுவதில் முந்தி நிற்கும் முகத்தைக் காட்டிலும் அறிவு மிக்கது வேறு உண்டோ?.
கலைஞர்
உள்ளத்தில் உள்ள விருப்பு வெறுப்புகளை முந்திக் கொண்டு வெளியிடுவதில் முகத்தைப் போல அறிவு மிக்கது வேறெதுவுமில்லை.
பரிமேலழகர்
உவப்பினும் காயினும் தான் முந்துறும் - உயிர் ஒருவனை உவத்தலானும் காய்தலானும் உறின், தான் அறிந்த அவற்றின்கண் அதனின் முற்பட்டு நிற்கும் ஆகலான்; முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ - முகம் போல அறிவுமிக்கது பிறிது உண்டோ? இல்லை. ('உயிர்க்கே அறிவுள்ளது, ஐம்பூதங்களான இயன்ற முகத்திற்கு இல்லை' என்பாரை நோக்கி, உயிரது கருத்தறிந்து அஃது உவக்குறின் மலர்ந்தும், காய்வுறின் கருகியும் வரலான், 'உண்டு' என மறுப்பார் போன்று, குறிப்பு அறிதற்குக் கருவி கூறியவாறு.)
புலியூர்க் கேசிகன்
முகத்தைக் காட்டிலும் அறிவால் மிக்கது வேறு யாதும் உண்டோ? உள்ளம் மகிழ்ந்தாலும் சினந்தாலும், தான் முந்திக் கொண்டு அதனை வெளியே காட்டிவிடும்
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | அமைச்சியல் (Amaichiyal) |
அதிகாரம் (Adhigaram) | குறிப்பறிதல் (Kuripparidhal) |