குறள் (Kural) - 706

குறள் (Kural) 706
குறள் #706
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்.

பொருள்
கண்ணாடி, தனக்கு உள்ளத்தைக் காட்டுவதுபோல ஒருவரது மனத்தில் உள்ளத்தில் அவரது முகம் காட்டி விடும்.

Tamil Transliteration
Atuththadhu Kaattum Palingupol Nenjam
Katuththadhu Kaattum Mukam.

மு.வரதராசனார்

தன்னை அடுத்தப் பொருளைத் தன்னிடம் காட்டும் பளிங்கு போல், ஒருவனுடைய நெஞ்சில் மிகுந்துள்ளதை அவனுடைய முகம் காட்டும்.

சாலமன் பாப்பையா

தன் அருகே இருக்கும் பொருளின் நிறத்தைக் காட்டும் பளிங்கினைப்போல் ஒருவனது மனத்தே நிகழ்வதை அவன் முகம் காட்டும்.

கலைஞர்

கண்ணாடி, தனக்கு உள்ளத்தைக் காட்டுவதுபோல ஒருவரது மனத்தில் உள்ளத்தில் அவரது முகம் காட்டி விடும்.

பரிமேலழகர்

அடுத்தது காட்டும் பளிங்கு போல் - தன்னை அடுத்த பொருளது நிறத்தைத் தானே கொண்டு காட்டும் பளிங்கு போல்; நெஞ்சம் கடுத்தது முகம் காட்டும் - ஒருவன் நெஞ்சத்து மிக்கதனை அவன் முகம் தானே கொண்டு காட்டும். ('அடுத்தது' என்பது ஆகுபெயர். கடுத்தது என்பது 'கடி' என்னும் உரிச்சொல் அடியாய் வந்த தொழிற் பெயர். உவமை ஒரு பொருள் பிறிதொரு பொருளின் பண்பைக் கொண்டு தோற்றுதலாகிய தொழில் பற்றி வந்தது.)

புலியூர்க் கேசிகன்

தன்னை அடுத்திருக்கும் ஓர் உருவத்தைத் தன்னிடத்தே காட்டும் பளிங்கைப் போல, ஒருவர் நெஞ்சம் கடுத்ததனை அவரது முகமும் தெளிவாகக் காட்டிவிடும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அமைச்சியல் (Amaichiyal)
அதிகாரம் (Adhigaram)குறிப்பறிதல் (Kuripparidhal)