குறள் (Kural) - 699
கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர்.
பொருள்
ஆட்சியால் நாம் ஏற்றுக் கொள்ளப்பட்டவராயிற்றே என்ற துணிவில், ஏற்றுகொள்ள முடியாத காரியங்களைத் தெளிந்த அறிவுடையவர்கள் செய்ய மாட்டார்கள்.
Tamil Transliteration
Kolappattem Endrennik Kollaadha Seyyaar
Thulakkatra Kaatchi Yavar.
மு.வரதராசனார்
அசைவற்ற தெளிந்த அறிவினை உடையவர் யாம் அரசரால் விரும்பப்பட்டோம் என்று எண்ணி அவர் விரும்பாதவற்றைச் செய்யமாட்டார்.
சாலமன் பாப்பையா
சலனம் அற்ற அறிவை உடையவர்கள், தாம் ஆட்சியாளரால் மிகவும் மரியாதைக்கு உரியவர்கள் என்று எண்ணி, ஆட்சியாளர் விரும்பாதவற்றைச் செய்யமாட்டார்.
கலைஞர்
ஆட்சியால் நாம் ஏற்றுக் கொள்ளப்பட்டவராயிற்றே என்ற துணிவில், ஏற்றுகொள்ள முடியாத காரியங்களைத் தெளிந்த அறிவுடையவர்கள் செய்ய மாட்டார்கள்.
பரிமேலழகர்
கொளப்பட்டேம் என்று எண்ணிக் கொள்ளாத செய்யார் - அரசனால் யாம்நன்கு மதிக்கப்பட்டேம் என்று கருதி அவன் விரும்பாதவற்றைச் செய்யார்; துளக்கு அற்ற காட்சியவர் - நிலைபெற்ற அறிவினையுடையார். (கொள்ளாதன செய்து அழிவு எய்துவார் கொளப்பாட்டிற்குப்பின் தம்மை வேறொருவராகக் கருதுவர் ஆகலின், முன்னையராகவே கருதி அஞ்சியொழுகுவாரைத் 'துளக்கு அற்ற காட்சியவர்' என்றார்.)
புலியூர்க் கேசிகன்
‘தாம் அரசராலே மதித்துக் கொள்ளப்பட்டோம்’ என்றும், அவர் ஏற்றுக் கொள்ளாத செயல்களைக் குற்றம் இல்லாத அறிவுடையவர்கள் செய்ய மாட்டார்கள்
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | அமைச்சியல் (Amaichiyal) |
அதிகாரம் (Adhigaram) | மன்னரைச் சேர்ந்து ஒழுகல் (Mannaraich Cherndhozhudhal) |