குறள் (Kural) - 698
இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற
ஒளியோடு ஒழுகப் படும்.
பொருள்
எமக்கு இளையவர்தான்; இன்ன முறையில் உறவுடையவர் தான் என்று ஆட்சிப் பொறுப்பில் இருப்போரை இகழ்ந்துரைக்காமல், அவர்கள் அடைந்துள்ள பெருமைக்கேற்பப் பண்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
Tamil Transliteration
Ilaiyar Inamuraiyar Endrikazhaar Nindra
Oliyotu Ozhukap Patum.
மு.வரதராசனார்
(அரசரை) எமக்கு இளையவர், எமக்கு இன்ன முறை உடையவர் என்று இகழாமல் அவருடைய நிலைக்கு ஏற்றவாறு அமைந்த புகழுடன் பொருந்த நடக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா
ஆட்சியாளருடன் பழகும்போது இவர் என்னைக் காட்டிலும் வயதில் சிறியவர்; இவர் உறவால் எனக்கு இன்ன முறை வேண்டும் என்று எண்ணாமல், ஆட்சியாளர் இருக்கும் பதவியை எண்ணி அவருடன் பழகுக.
கலைஞர்
எமக்கு இளையவர்தான்; இன்ன முறையில் உறவுடையவர் தான் என்று ஆட்சிப் பொறுப்பில் இருப்போரை இகழ்ந்துரைக்காமல், அவர்கள் அடைந்துள்ள பெருமைக்கேற்பப் பண்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
பரிமேலழகர்
இளையர் இன முறையர் என்று இகழார் - இவர் எம்மின் இளையர் என்றும், எமக்கு இன்ன முறையினையுயடையர் என்றும் அரசரை அவமதியாது; நின்ற ஒளியொடு ஒழுகப்படும் - அவர் மாட்டு நின்ற ஒளியொடு பொருந்த ஒழுகுதல் செய்யப்படும். (ஒளி, உறங்காநிற்கவும் தாம் உலகம் காக்கின்ற அவர் கடவுள்தன்மை. அதனோடு பொருந்த ஒழுகலாவது, அவர் கடவுளரும் தாம் மக்களுமாய் ஒழுகுதல். அவ்வொளியால் போக்கப்பட்ட இளமையும் முறைமையும் பற்றி இகழ்வராயின், தாமும் போக்கப்படுவர் என்பது கருத்து.)
புலியூர்க் கேசிகன்
‘இளையவர்’ என்று கருதியோ, ‘இனமுறை’ என்று கருதியோ இகழாமல், நிலைபெற்ற அறிவுடன் அரசனிடம் நடந்து கொள்ளுதல் வேண்டும்
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | அமைச்சியல் (Amaichiyal) |
அதிகாரம் (Adhigaram) | மன்னரைச் சேர்ந்து ஒழுகல் (Mannaraich Cherndhozhudhal) |