குறள் (Kural) - 69

குறள் (Kural) 69
குறள் #69
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.

பொருள்
நல்ல மகனைப் பெற்றெடுத்தவள் என்று ஊரார் பாராட்டும் பொழுது அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியை அந்தத் தாய் அடைவாள்.

Tamil Transliteration
Eendra Pozhudhin Peridhuvakkum Thanmakanaich
Chaandron Enakketta Thaai.

மு.வரதராசனார்

தன்
மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை
பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்.

சாலமன் பாப்பையா

தம்
மகனைக் கல்வி ஒழுக்கங்களால் நிறைந்தவன் என்று அறிவுடையோர் கூற அதைக் கேட்ட
தாய், அவனைப் பெற்ற பொழுதைக் காட்டிலும் மிகுதியாக மகிழ்வாள்.

கலைஞர்

நல்ல
மகனைப் பெற்றெடுத்தவள் என்று ஊரார் பாராட்டும் பொழுது அவனைப் பெற்றபொழுது
அடைந்த மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியை அந்தத் தாய் அடைவாள்.

பரிமேலழகர்

ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் - தான் பெற்ற பொழுதை மகிழ்ச்சியினும் மிக மகிழும்; தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் - தன் மகனைக் கல்வி கேள்விகளால் நிறைந்தான் என்று அறிவுடையோர் சொல்லக் கேட்ட தாய். (கவானின் கண்கண்ட பொது உவகையினும் சால்புடையான் எனக்கேட்ட சிறப்பு உவகை பெரிதாகலின், 'பெரிது உவக்கும்' எனவும், 'பெண்ணியல்பால் தானாக அறியாமையின் கேட்ட தாய்' எனவும் கூறினார். அறிவுடையார் என்பது வருவிக்கப்பட்டது. சான்றோன் என்றற்கு உரியர் அவர் ஆகலின். தாய் உவகைக்கு அளவு இன்மையின் அஃது இதனான் பிரித்துக் கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்-தன் மகனைக் கல்வியறிவு நிறைந்தோனென்று அறிவுடையோர் சொல்லக்கேட்ட தாய்; ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும்-தான் அவனைப் பெற்றெடுத்த பொழுதினும் பெரிது மகிழ்வாள். "ஐயிரு திங்களா யங்கமெலா நொந்துபெற்றுப் பையலென்ற போதே பரிந்தெடுத்து" மகிழ்ந்ததினும் சான்றோனெனக் கேட்ட மகிழ்ச்சி சிறந்ததாதலின்,'பெரிதுவக்கும்' என்றார். அறிவுடையோர் என்பது அவாய் நிலையான் வருவிக்கப்பட்டது. காமஞ்செப்பாது கண்டது மொழியும் நடுநிலையுண்மைக் கூற்று அவரதேயாகலின். மனம் மட்டுங் குளிரும் தந்தை மகிழ்ச்சியினும் மனமும் வயிறும் மார்பும் குளிரும் தாய் மகிழ்ச்சி மிகப்பெரிதாகலின் தனித்துக் கூறப்பட்டது. தமிழ மகளிர்க்கு உயர்நிலைக் கல்வி விலக்கப் படாமையாலும் இருபாலர்க்கும் உரிய பொதுச்செய்திகளையும் தலைமைபற்றி ஆண்பாலின்மேல் வைத்துக் கூறுவது மரபாதலாலும்,"தம்மிற்றம் மக்களறிவுடைமை" என்று ஆசிரியரும் பொதுப் படக் கூறியிருப்பதாலும்,"பெண்ணியல்பால் தானாக வறியாமையிற் 'கேட்டதாய்' என்றார்."என்று பரிமேலழகர் கூறியது தவறாம். இனி, ஒளவையார்,காக்கைபாடினியார்,நச்செள்ளையார்,காவற்பெண்டு,குறமகள் இளவெயினி,பூதப்பாண்டியன் தேவியர், பேய்மகள் இளவெயினி, வெண்ணிக்குயத்தியார், வெறிபாடிய காமக்கண்ணியார் முதலிய பண்டைப் புலத்தியரை அவரும் அறிந்திருந்தமையால், அவர் கூற்று நெஞ்சார்ந்த பொய்யுமாம். மகன்மேலுள்ள அன்புப் பெருக்கால் அவனறிவை மிகுத்தெண்ணும் தாய்க்கு நடுநிலையறிஞர் பாராட்டு, முழுநம்பிக்கை யுண்டாக்கும் என்பதே கருத்து.

மணக்குடவர்

தான்பெற்ற காலத்தினும் மிக மகிழும்; தன்மகனைச் சான்றோனென்று பிறர் சொல்லக் கேட்ட காலத்துத் தாய்.

புலியூர்க் கேசிகன்

தன் மகனைச் சான்றாளன் என்று பலரும் போற்றுவதைக் கேள்வியுற்ற தாய், அவனைப் பெற்றபொழுதிலும் பெரிதாக மகிழ்வாள்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)மக்கட்பேறு (Pudhalvaraip Perudhal)