குறள் (Kural) - 68

குறள் (Kural) 68
குறள் #68
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.

பொருள்
பெற்றோரைக் காட்டிலும் பிள்ளைகள் அறிவிற் சிறந்து விளங்கினால், அது பெற்றோருக்கு மட்டுமேயன்றி உலகில் வாழும் அனைவருக்கும் அக மகிழ்ச்சி தருவதாகும்.

Tamil Transliteration
Thammindham Makkal Arivutaimai Maanilaththu
Mannuyirk Kellaam Inidhu.

மு.வரதராசனார்

தம் மக்களின் அறிவுடைமை தமக்கு இன்பம் பயப்பதை விட உலகத்து உயிர்களுக்கேல்லாம் மிகுந்த இன்பம் பயப்பதாகும்.

சாலமன் பாப்பையா

தம் பிள்ளைகள் அறிவு மிக்கவராக இருப்பது, தம்மைக் காட்டிலும், இப்பெரிய பூமியில் அழியாமல் தொடரும் உயிர்களுக்கு எல்லாம் இனிது.

கலைஞர்

பெற்றோரைக்
காட்டிலும் பிள்ளைகள் அறிவிற் சிறந்து விளங்கினால், அது பெற்றோருக்கு
மட்டுமேயன்றி உலகில் வாழும் அனைவருக்கும் அக மகிழ்ச்சி தருவதாகும்.

பரிமேலழகர்

தம் மக்கள் அறிவுடைமை - தம் மக்களது அறிவுடைமை; மாநிலத்து மன்உயிர்க்கு எல்லாம் தம்மின் இனிது - பெரிய நிலத்து மன்னா நின்ற உயிர்கட்கு எல்லாம் தம்மினும் இனிது ஆம். (ஈண்டு 'அறிவு' என்றது இயல்பாகிய அறிவோடு கூடிய கல்வியறிவினை. 'மன்னுயிர்' என்றது ஈண்டு அறிவுடையார் மேல் நின்றது. அறிவுடைமை கண்டு இன்புறுதற்கு உரியார் அவராகலின். இதனான் தந்தையினும் அவையத்தார் உவப்பர் என்பது கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

தம்மின் - தம்மினும் மிகுதியாக; தம் மக்கள் அறிவுடைமை - தம் மக்கள் கல்வியறிவுடையராயிருத்தல் ; மாநிலத்து மன் உயிர்க்கொல்லாம் இனிது - பெற்றோராகிய தமக்கு மட்டுமன்றி இம்மண்ணுலகத்துள்ள மற்றெல்லா மக்கட்கும் இன்பந் தருவதாம். மன் = மாந்தன் (OE,OS,OHG man, Skt. மநு). மன்பதை = மக்கட் கூட்டம். மன்னுயிர் என்பது இருபெயரொட்டு. மக்கள் கல்வியறிவில் அவையோரின் மட்டுமன்றிப் பெற்றோரினும் விஞ்சியிருக்கலாமென்பது கருத்து. தந்தையும் கற்றோனாகவும் அவையத்து முந்தியிருப்பவனாகவு மிருக்கலா மாதலால், "தந்தையினும் அவையத்தா ருவப்பர்". என்று பரிமேலழகர் கூறுவது பொருந்தாது.

மணக்குடவர்

தம்மக்க ளறிவுடையாரானால் அது தம்மினும் உலகத்துயிர்கட்கெல்லாம் இனிதாம்.

புலியூர்க் கேசிகன்

தம்மைக் காட்டினும், தம் மக்கள் அறிவுடையவராக விளக்கம் பெறுதல், பெற்றோருக்கு மட்டுமல்லாமல், பெரிய உலகிலுள்ள உயிர்களுக்கெல்லாம் இனிமையானது ஆகும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)மக்கட்பேறு (Pudhalvaraip Perudhal)