குறள் (Kural) - 70

குறள் (Kural) 70
குறள் #70
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.

பொருள்
``ஆகா! இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பெறும்பேறு'', என்று ஒரு மகன் புகழப்படுவதுதான், அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யக்கூடிய கைம்மாறு எனப்படும்.

Tamil Transliteration
Makandhandhaikku Aatrum Udhavi Ivandhandhai
Ennotraan Kol Enum Sol.

மு.வரதராசனார்

மகன்
தன் தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன
தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.

சாலமன் பாப்பையா

தன்னைக்
கல்வி அறிவு உடையவனாய் ஆளாக்கிய தந்தைக்கு மகன் செய்யும் கைம்மாறு,
பிள்ளையின் ஒழுக்கத்தையும் அறிவையும் கண்டவர், இப்பிள்ளையைப் பெறுவதற்கு
இவன் தகப்பன் என்ன தவம் செய்தானோ என்று சொல்லும் சொல்லைப் பெற்றுத் தருவதே.

கலைஞர்

ஆகா!
இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பெரும்பேறு, என்று ஒரு மகன்
புகழப்படுவதுதான், அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யக்கூடிய கைம்மாறு
எனப்படும்.

பரிமேலழகர்

தந்தைக்கு மகன் ஆற்றும் உதவி - கல்வியுடையனாக்கிய தந்தைக்கு மகன் செய்யும் கைம்மாறாவது; இவன் தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல் - தன்னறிவும் ஒழுக்கமுங் கண்டார் இவன் தந்தை இவனைப் பெறுதற்கு என்ன தவஞ் செய்தான் கொல்லோ வென்று சொல்லுஞ் சொல்லை நிகழ்த்துதல். ('சொல்' லென்பது நிகழ்த்துதலாகிய தன் காரணந்தோன்ற நின்றது.நிகழ்த்துதல் - அங்ஙனஞ் சொல்ல வொழுகல்.இதனாற் புதல்வன் கடன் கூறப்பட்டது)

ஞா.தேவநேயப் பாவாணர்

தந்தைக்கு மகன் ஆற்றும் உதவி-தான் பிறந்ததினின்று தன்னை வளர்த்துக் கல்வி கற்கவைத்து, உலகிற் பிழைப்பதற்கு ஒரு தொழிலிற் பயிற்றி, மணஞ் செய்வித்து மனையறம் படுத்தி, தன் தேட்டிலும் ஒரு கூறளித்த தன் தந்தைக்கு, மகன் செய்ய வேண்டிய கைம்மாறாவது; இவன் தந்தை என் நோற்றான்கொல் எனும் சொல்-தன் அறிவாற்றலையும் நற்குண நற்செயல்களையும் கண்டோர், இவன் தந்தை இவ்வருமந்த மகனைப் பெறுதற்கு என்ன கடுந்தவஞ் செய்தானோ என்று வியந்து கூறுஞ்சொல்லை, அவர் வாயினின்று தானாக வரச் செய்தலாம். சொல் என்றது சொல்லை வருவித்தலைக் குறித்தது. 'கொல்' ஐயம் குறித்த இடைச்சொல். தந்தை நெடுங்காலமாகச் செய்த பல்வேறு பெருநன்மைக்கும் மகன் செய்ய வேண்டிய கைம்மாறு ஒரு சொல்லே என்று; ஒருவகை அணிநயம்படக் கூறினார். இதனால், தந்தை செய்த நன்றிக்குச் சரியாக ஈடுசெய்தல் அரிதென்பதும் , தென்புலத்தார் கடனைத் தீர்க்க நன்மக்களைப் பெறுதல் பெற்றோர்தம் விருப்பம்போற் செய்துகொள்ளக்கூடிய செயலன்றென்பதும், பெறப்படும்.

மணக்குடவர்

மகன் தந்தைக்குச் செய்யும் உபகாரம் இவன் தந்தை என்ன தவஞ்செய்தானென்று உலகத்தார் சொல்லுஞ் சொல்லைப் படைத்தல். இது நெறியினொழுகுவாரை உலகத்தார் புகழ்வாராதலான், மகனும் ஒழுக்கமுடையனாக வேண்டுமென்றது.

புலியூர்க் கேசிகன்

மகன், தந்தைக்குச் செய்யும் உதவி ‘இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன நோன்பு செய்தானோ’ என்னும் புகழ்ச் சொல்லே ஆகும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)மக்கட்பேறு (Pudhalvaraip Perudhal)