குறள் (Kural) - 67

குறள் (Kural) 67
குறள் #67
தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.

பொருள்
தந்தை தன் மக்களுக்குச் செய்யவேண்டிய நல்லுதவி அவர்களை அறிஞர்கள் அவையில் புகழுடன் விளங்குமாறு ஆக்குதலே ஆகும்.

Tamil Transliteration
Thandhai Makarkaatrum Nandri Avaiyaththu
Mundhi Iruppach Cheyal.

மு.வரதராசனார்

தந்தை
தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன்
முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்.

சாலமன் பாப்பையா

தகப்பன் தன் பிள்ளைக்குச் செய்யும் நன்மை, கற்றவர் அவையில் முதன்மைப் பெறச் செய்வதே.

கலைஞர்

தன் மக்களுக்குச் செய்யவேண்டிய நல்லுதவி அவர்களை அறிஞர்கள் அவையில் புகழுடன் விளங்குமாறு ஆக்குதலே ஆகும்.

பரிமேலழகர்

67 தந்தை மகற்கு ஆற்றும் நன்றி - தந்தை புதல்வனுக்குச் செய்யும் நன்மையாவது;அவையத்து முந்தி இருப்பச் செயல் - கற்றார் அவையின்கண் அவரினும் மிக்கு இருக்குமாறு கல்வியுடையன் ஆக்குதல். (பொருளுடையான் ஆக்குதல் முதலாயின துன்பம் பயத்தலின் நன்மை ஆகா என்பது கருத்து. இதனான் தந்தை கடன் கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

தந்தை மகற்கு ஆற்றும் நன்றி - தந்தை கல்வித் திறமையுள்ள தன் மகனுக்குச் செய்யவேண்டிய நன்மையாவது; அவையத்து முந்தி இருப்பச் செயல் - கற்றோரவையின்கண் முதன்மையாயிருக்குமாறு அவனைச் சிறந்த கல்விமானாக்குதல். மகனைச் செல்வனாக்குவதிலுங் கல்விமானாக்குவது சிறந்தது என்பது கருத்து. 'சான்றோ னாக்குதல தந்தைக்குக் கடனே '. என்றார் பொன்முடியாரும். ( புறம். 312)

மணக்குடவர்

தந்தை மகனுக்குச் செய்யும் உபகாரம் அவையத்தின் கண்ணே முந்தியிருக்குமாறு கல்வி யுண்டாக்குதல்.

புலியூர்க் கேசிகன்

ஒரு தந்தை தன் மகனுக்குச் செய்யும் நல்ல உதவி, அவனைக் கற்றோர் அவையிலே முதன்மை பெற்றவனாக இருக்கச் செய்தலே ஆகும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)மக்கட்பேறு (Pudhalvaraip Perudhal)