குறள் (Kural) - 672
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.
பொருள்
நிதானமாகச் செய்ய வேண்டிய காரியங்களைத் தாமதித்துச் செய்யலாம்; ஆனால் விரைவாகச் செய்ய வேண்டிய காரியங்களில் தாமதம் கூடாது.
Tamil Transliteration
Thoonguka Thoongich Cheyarpaala Thoongarka
Thoongaadhu Seyyum Vinai.
மு.வரதராசனார்
காலந்தாழ்த்தி செய்யத் தக்கவற்றைக் காலந்தாழ்ந்தே செய்ய வேண்டும், காலந்தாழ்த்தாமல் விரைந்து செய்யவேண்டிய செயல்களைச் செய்ய காலந்தாழ்த்தக் கூடாது.
சாலமன் பாப்பையா
காலந்தாழ்த்திச் செய்யவேண்டிய செயல்கள் என்றால் காலந்தாழ்த்துக; காலம் தாழத்தாது செய்ய வேண்டிய செயல்கள் என்றால் காலம் தாழ்த்த வேண்டா.
கலைஞர்
நிதானமாகச் செய்ய வேண்டிய காரியங்களைத் தாமதித்துச் செய்யலாம்; ஆனால் விரைவாகச் செய்ய வேண்டிய காரியங்களில் தாமதம் கூடாது.
பரிமேலழகர்
தூங்கிச் செயற்பால தூங்குக - நீட்டித்துச் செய்யும் பகுதியவாய வினைகளுள் நீட்டிக்க; தூங்காது செய்யும் வினை தூங்கற்க - நீட்டியாது செய்யும் வினைகளுள் நீட்டியாது ஒழிக. (இரு வழியும் இறுதிக்கண் தொக்க ஏழாவது விரிக்கப்பட்டது. இருவகை வினைகளும் வலியானும் காலத்தானும் அறியப்படும். மாறிச்செய்யின், அவை வாயா என்பது கருத்து. மேல் 'தூங்காமை' என்றார்(குறள் 383), ஈண்டதனைப் பகுத்துக் கூறினார். இவை இரண்டு பாட்டானும் பொதுவகையால் வினை செய்யும் திறம் கூறப்பட்டது.)
புலியூர்க் கேசிகன்
காலம் கடந்து செய்வதற்கு உரிய செயல்களைக் காலம் தாழ்த்தியே செய்ய வேண்டும்; கடத்தாமல் செய்வதற்குரிய செயல்களை விரைந்து செய்ய வேண்டும்
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | அமைச்சியல் (Amaichiyal) |
அதிகாரம் (Adhigaram) | வினை செயல்வகை (Vinaiseyalvakai) |