குறள் (Kural) - 671
சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது.
பொருள்
ஒரு செயலில் ஈடுபட முடிவெடுக்கும்போது அச்செயலால் விளையும் சாதக பாதகங்கள் பற்றிய ஆராய்ச்சியும் முடிவடைந்திருக்க வேண்டும் முடிவெடுத்த பிறகு காலந்தாழ்த்துவது தீதாக முடியும்.
Tamil Transliteration
Soozhchchi Mutivu Thuniveydhal Aththunivu
Thaazhchchiyul Thangudhal Theedhu.
மு.வரதராசனார்
ஆராய்ந்து எண்ணுவதற்கு எல்லை துணிவு கொள்வதே ஆகும், அவ்வாறு கொண்ட துணிவு காலந் தாழ்த்து நிற்பது குற்றமாகும்.
சாலமன் பாப்பையா
ஓர் ஆலோசனையின் முடிவு, செயலைச் செய்யும் துணிவைப் பெறுவதே, பெற்ற அத்துணிவைச் செயலாக்கக் காலம் தாழ்த்தினால் அது தீமையாகும்.
கலைஞர்
ஒரு செயலில் ஈ.டுபட முடிவெடுக்கும்போது அச்செயலால் விளையும் சாதக பாதகங்கள் பற்றிய ஆராய்ச்சியும் முடிவடைந்திருக்க வேண்டும். முடிவெடுத்த பிறகு காலந்தாழ்த்துவது தீதாக முடியும்.
பரிமேலழகர்
சூழ்ச்சி முடிவு துணிவு எய்தல் - விசாரத்திற்கு எல்லையாவது விசாரிக்கின்றான் 'இனி இது தப்பாது' என்னும் துணிவினைப் பெறுதல்; அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது - அங்ஙனம் துணிவுபெற்ற வினை. பின் நீட்டிப்பின்கண் தங்குமாயின் அது குற்றமுடைத்து. ('சூழ்ச்சி முடிவு துணிவு எய்தல்' எனவே, துணிவு எய்தும் அளவும் சூழவேண்டும் என்பது பெற்றாம். பின்னர்த் 'துணிவு' ஆகு பெயர். நீட்டிப்பு - செய்யுங் காலத்துச் செய்யாமை. அஃதுள்வழிக் காலக்கழிவாகலானும் பகைவர் அறிந்து அழித்தலானும் முடியாமையின் அதனைத் தீது என்றார்.)
புலியூர்க் கேசிகன்
ஒரு செயலைப் பற்றிய ஆராய்ச்சியின் முடிவு, மனத்தில் துணிவு பெறுவதே ஆகும்; அவ்வாறு துணிவு கொண்ட பின், அதனைச் செய்யாமல் காலம் கடத்துதல் தீமையாகும்
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | அமைச்சியல் (Amaichiyal) |
அதிகாரம் (Adhigaram) | வினை செயல்வகை (Vinaiseyalvakai) |