குறள் (Kural) - 66

குறள் (Kural) 66
குறள் #66
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.

பொருள்
தங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்காதவர்கள்தான் குழலோசை, யாழோசை ஆகிய இரண்டும் இனிமையானவை என்று கூறுவார்கள்.

Tamil Transliteration
Kuzhal Inidhu Yaazhinidhu Enpadham Makkal
Mazhalaichchol Kelaa Thavar.

மு.வரதராசனார்

தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது யாழின் இசை இனியது என்று கூறுவர்.

சாலமன் பாப்பையா

பெற்ற பிள்ளைகள் பேசும் பொருளற்ற மழலைச் சொல்லைக் கேட்காதவர்தாம், குழலும் யாழும் கேட்க இனியவை என்பர்.

கலைஞர்

தங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்காதவர்கள்தான் குழலோசை, யாழோசை ஆகிய இரண்டும் இனிமையானவை என்று கூறுவார்கள்.

பரிமேலழகர்

குழல் இனிது யாழ் இனிது என்ப - குழலிசை இனிது யாழிசை இனிது என்று சொல்லுவர்; தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர் - தம் புதல்வருடைய குதலைச் சொற்களைக் கேளாதவர். ('குழல்', 'யாழ்' என்பன ஆகுபெயர். கேட்டவர் அவற்றினும் மழலைச்சொல் இனிது என்பர் என்பது குறிப்பெச்சம். இனிமை மிகுதிபற்றி மழலைச்சொல்லைச் சிறப்பு வகையானும் கூறியவாறு. இவை மூன்று பாட்டானும் இம்மைப் பயன் கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர் - தம் குழந்தைகளின் குதலைச் சொற்களைக் கேட்டறியாதவர்; குழல் இனிது யாழ் இனிது என்ப-புல்லாங்குழலிசை இனிதென்றும் செங்கோட்டியாழிசை இனிதென்றுங் கூறுவர். 'குழல்' 'யாழ்' என்பன ஆகுபெயர். ஈரிசையினும் மழலைச்சொல் இனிதென்பது காதல்பற்றிய உயர்வு நவிற்சியே. செங்கோட்டியாழ் குடத்தின்மேல் போர்க்கப்பட்ட பண்டை வீணை.

மணக்குடவர்

குழலோசை யினிது, யாழோசை யினிதென்று சொல்லுவர் தம் மக்களது மழலைச் சொற்களைக் கேளாதவர்; கேட்டவர் சொல்லார்.

புலியூர்க் கேசிகன்

தம் மக்களின் மழலைப் பேச்சைக் கேட்டு இன்புறாதவர்களே, ‘குழலிசை இனியது’, ‘யாழிசை இனியது’ என்று புகழ்ந்து கூறுவார்கள்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)மக்கட்பேறு (Pudhalvaraip Perudhal)