குறள் (Kural) - 65
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.
பொருள்
தம் குழந்தைகளைத் தழுவி மகிழ்வது உடலுக்கு இன்பத்தையும், அந்தக் குழந்தைகளின் மழலை மொழி கேட்பது செவிக்கு இன்பத்தையும் வழங்கும்.
Tamil Transliteration
Makkalmey Theental Utarkinpam Matru Avar
Sorkettal Inpam Sevikku.
மு.வரதராசனார்
மக்களின் உடம்பைத் தொடுதல் உடம்பிற்கு இன்பம் தருவதாகும்: அம் மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டால் செவிக்கு இன்பம் தருவதாகும்.
சாலமன் பாப்பையா
பெற்ற பிள்ளைகளின் உடலைத் தழுவுவது உடலுக்கு இன்பம். அவர்களின் பேச்சைக் கேட்பது காதிற்கு இன்பம்.
கலைஞர்
தம் குழந்தைகளைத் தழுவி மகிழ்வது உடலுக்கு இன்பத்தையும், அந்தக் குழந்தைகளின் மழலை மொழி கேட்பது செவிக்கு இன்பத்தையும் வழங்கும்.
பரிமேலழகர்
உடற்கு இன்பம் மக்கள்மெய் தீண்டல் - ஒருவன் மெய்க்கு இன்பமாவது மக்களது மெய்யைத் தீண்டுதல்; செவிக்கு இன்பம் அவர் சொல் கேட்டல் - செவிக்கு இன்பமாவது அவரது சொல்லைக் கேட்டல். ('மற்று' வினைமாற்று. மக்களது மழலைச் சொல்லே அன்றி அவர் கற்றறிவுடையராய்ச் சொல்லுஞ் சொல்லும் இன்பமாகலின், பொதுப்படச் 'சொல்' என்றார். 'தீண்டல்', 'கேட்டல்' என்னும் காரணப்பெயர்கள் ஈண்டுக் காரியங்கள்மேல் நின்றன.)
ஞா.தேவநேயப் பாவாணர்
மக்கள் மெய் தீண்டல் உடற்கு இன்பம் - பெற்றோர்க்குத் தம் குழந்தைகளின் உடம்பைத் தொடுதல் தம் உடலுக்கு இன்பம்; அவர் சொல் கேட்டல் செவிக்கு இன்பம் - அவரது மழலைச் சொற்கேட்டல் தம் செவிக்கு இன்பம். 'மற்று' வினைமாற்று. இங்கு இன்பத்திற்குக் கரணியம், பெற்றோரின் காதலொடு குழந்தைகளின் உடம்பு நொய்ம்மையும் குரல் மழலைமையுமாம்.
மணக்குடவர்
தம்மக்கள் தமதுடம்பினைச் சார்தல் தம்முடம்பிற் கின்பமாம்: அவர் சொற்களைக் கேட்டல் செவிக்கின்பமாம்.
புலியூர்க் கேசிகன்
தம் மக்களின் உடம்பைத் தொடுதல் உலகுக்கு இன்பமாகும்
பால் (Paal) | அறத்துப்பால் (Araththuppaal) |
---|---|
இயல் (Iyal) | இல்லறவியல் (Illaraviyal) |
அதிகாரம் (Adhigaram) | மக்கட்பேறு (Pudhalvaraip Perudhal) |