குறள் (Kural) - 657

குறள் (Kural) 657
குறள் #657
பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை.

பொருள்
பழிக்கு அஞ்சாமல் இழிவான செயல்களைப் புரிந்து செல்வந்தராக வாழ்வதைவிட, கொடிய வறுமை தாக்கினாலும் கவலைப்படாமல் நேர்மையாளராக வாழ்வதே மேலானதாகும்.

Tamil Transliteration
Pazhimalaindhu Eydhiya Aakkaththin Saandror
Kazhinal Kurave Thalai.

மு.வரதராசனார்

பழியை மேற்கொண்டு இழிதொழில் செய்து பெறும் செல்வத்தை விடச் சான்றோர் வினைத்தூய்மையோடிருந்து பெறும் பொல்லாத வறுமையே சிறந்தது.

சாலமன் பாப்பையா

பழியை ஏற்று அடைந்த செல்வத்தைக் காட்டிலும், பெரியோர் அனுபவிக்கும் வறுமையே உயர்ந்தது.

கலைஞர்

பழிக்கு அஞ்சாமல் இழிவான செயல்களைப் புரிந்து செல்வந்தராக வாழ்வதைவிட, கொடிய வறுமை தாக்கினாலும் கவலைப்படாமல் நேர்மையாளராக வாழ்வதே மேலானதாகும்.

பரிமேலழகர்

பழி மலைந்து எய்திய ஆக்கத்தின் - சாலாதார் தீய வினைகளைச் செய்து அதனாற் பழியைத் தம்மேற் கொண்டு பெற்ற செல்வத்தின்; சான்றோர் கழி நல்குரவே தலை - அதுமேற் கொள்ளாத சான்றோர் அனுபவிக்கும் மிக்க நல்குரவே உயர்ந்தது. (நிலையாத செல்வத்தின் பொருட்டு நிலையின பழியை மேற்கோடல் சால்போடு இயையாமையின், 'சான்றோர் கழிநல்குரவே தலை' என்றார்.)

புலியூர்க் கேசிகன்

பழிகளைச் செய்து, அதனாலே வந்தடைந்த செல்வப் பெருக்கத்தை காட்டிலும், சான்றோர்களது வறுமையின் மிகுதியே மிகவும் சிறந்ததாகும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அமைச்சியல் (Amaichiyal)
அதிகாரம் (Adhigaram)வினைத் தூய்மை (Vinaiththooimai)