குறள் (Kural) - 656

குறள் (Kural) 656
குறள் #656
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை.

பொருள்
பசியால் துடிக்கும் தனது தாயின் வேதனையைத் தணிப்பதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபடக்கூடாது.

Tamil Transliteration
Eendraal Pasikaanpaan Aayinunj Cheyyarka
Saandror Pazhikkum Vinai.

மு.வரதராசனார்

பெற்ற தாயின் பசியைக் கண்டு வருந்த நேர்ந்தாலும், சான்றோர் பழிப்பதற்குக் காரணமான இழிவுற்றச் செயல்களைச் செய்யக்கூடாது.

சாலமன் பாப்பையா

தன்னைப் பெற்றவனின் பசியைக் காண நேர்ந்தாலும் அதைப் போக்கப் பெருமக்கள் பழிக்கும் செயல்களைச் செய்யாது விடுக.

கலைஞர்

பசியால் துடிக்கும் தனது தாயின் வேதனையைத் தணிப்பதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபடக்கூடாது.

பரிமேலழகர்

ஈன்றாள் பசி காண்பான் ஆயினும் - தன்னைப் பயந்தாளது பசியை வறுமையால் கண்டு இரங்கும் தன்மையினான் எனினும்; சான்றோர் பழிக்கும் வினை செய்யற்க - அது சுட்டி அறிவுடையார் பழிக்கும் வினைகளை ஒருவன் செய்யாதொழிக. ('இறந்த மூப்பினராய இருமுதுகுரவரும் கற்புடை மனைவியும் குழவியும் பசியான் வருந்தும் எல்லைக்கண் தீயன பலவுஞ் செய்தாயினும் புறந்தருக' என்னும் அறநூற்பொது விதி, பொருள்நூல் வழி ஒழுகுதலும், அரசர் தொழிற்கு உரியராதலும், நன்கு மதிக்கற்பாடும் உடைய அமைச்சர்க்கு எய்தாமை பற்றி, இவ்வாறு கூறினார். இவை ஐந்து பாட்டானும், 'பாவமும் பழியும் பயக்கும் வினை செய்யற்க' என்பது கூறப்பட்டது.)

புலியூர்க் கேசிகன்

தன்னைப் பெற்ற தாயின் பசித் துன்பத்தைக் கண்ணால் கண்ட போதிலும், மேலோர்கள் பழிக்கும் செயல்களை ஒருவன் செய்யவே கூடாது

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அமைச்சியல் (Amaichiyal)
அதிகாரம் (Adhigaram)வினைத் தூய்மை (Vinaiththooimai)