குறள் (Kural) - 654

குறள் (Kural) 654
குறள் #654
இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்.

பொருள்
தெளிவான அறிவும் உறுதியும் கொண்டவர்கள் துன்பத்திலிருந்து விடுபடுவதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபட மாட்டார்கள்.

Tamil Transliteration
Itukkan Patinum Ilivandha Seyyaar
Natukkatra Kaatchi Yavar.

மு.வரதராசனார்

அசைவற்ற ‌தெளிந்த அறிவினையுடையவர், துன்பத்தில் சிக்குண்டாலும் (அத் துன்பத்தைத் தீர்ப்பதற்க்காகவும்) இழிவானச் செயல்களைச் செய்யமாட்டார்.

சாலமன் பாப்பையா

தடுமாற்றம் இல்லாது தெளிந்த அறிவினை உடையவர் தாம் துன்பப்பட நேர்ந்தாலும் இழிவான செயல்களைச் செய்யமாட்டார்.

கலைஞர்

தெளிவான அறிவும் உறுதியும் கொண்டவர்கள் துன்பத்திலிருந்து விடுபடுவதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபட மாட்டார்கள்.

பரிமேலழகர்

இடுக்கண் படினும் இளிவந்த செய்யார் - தாம் இடுக்கணிலே படவரினும், அது தீர்தற்பொருட்டு முன் செய்தார்க்கு இளிவந்த வினைகளைச் செய்யார்; நடுக்கு அற்ற காட்சியவர் - துளக்கம் அற்ற தெளிவினை உடையார். (சிறிதுபோழ்தில் கழிவதாய இடுக்கண் நோக்கி, எஞ்ஞான்றும் கழியாத இளிவு எய்தற்பாலது அன்று என்பதூஉம், அஃது எய்தினாலும் வருவது வரும் என்பதூஉம் தெளிவர் ஆகலான் , 'செய்யார்' என்றார்.)

புலியூர்க் கேசிகன்

கலக்கம் இல்லாத அறிவை உடையவர்கள், தாம் இடையூறுகளுக்கு உட்பட நேர்ந்த காலத்திலும், இழிவான செயல்கள் எதையுமே செய்ய மாட்டார்கள்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அமைச்சியல் (Amaichiyal)
அதிகாரம் (Adhigaram)வினைத் தூய்மை (Vinaiththooimai)