குறள் (Kural) - 653
ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர்.
பொருள்
மேன்மேலும் உயர்ந்திட வேண்டுமென விரும்புகின்றவர்கள், தம்முடைய செயல்களால் தமது புகழ் கெடாமல் கவனமாக இருந்திட வேண்டும்.
Tamil Transliteration
Oodhal Ventum Olimaazhkum Seyvinai
Aaadhum Ennu Mavar.
மு.வரதராசனார்
மேன்மேலும் உயர்வோம் என்று விரும்பி முயல்கின்றவர் தம்முடைய புகழ் கெடுவதற்குக் காரணமான செயலைச் செய்யாமல் விட வேண்டும்.
சாலமன் பாப்பையா
உயர்ந்து விடவேண்டும் என்று முயல்பவர் தாம் வாழும் காலத்துத் தம் மேன்மையை அழிக்கும் செயல்களைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
கலைஞர்
மேன்மேலும் உயர்ந்திட வேண்டுமென விரும்புகின்றவர்கள், தம்முடைய செயல்களால் தமது புகழ் கெடாமல் கவனமாக இருந்திட வேண்டும்.
பரிமேலழகர்
ஆதும் என்னும் அவர் - மேலாகக்கடவோம் என்று கருதுவார்; ஒளி மாழ்கும் வினை செய் ஓஒதல் வேண்டும் - தம் ஒளி கெடுதற்குக் காரணமாய வினையைச் செய்தலைத் தவிர்க. ('ஓஒதல்வேண்டும்' என்பது ஒரு சொல் நீர்மைத்து. ஓவுதல் என்பது குறைந்து நின்றது. ஒளி - தாம் உள காலத்து எல்லாரானும் நன்கு மதிக்கப்படுதல். 'செய்' என்னும் முதனிலைத் தொழிற்பெயர் மாற்றப்பட்டது. அன்றிச் செய்வினை என வினைத் தொகையாக்கியவழிப் பொருளின்மை அறிக. ஒளிகெட வருவது ஆக்கம் அன்று என்பதாம்.)
புலியூர்க் கேசிகன்
மேலாக உயர்வதற்கு நினைக்கின்றவர்கள், தங்களுடைய மதிப்பைக் கெடுக்கும் எந்த ஒரு செயலையும் எப்போதும் செய்யாமல் இருக்க வேண்டும்
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | அமைச்சியல் (Amaichiyal) |
அதிகாரம் (Adhigaram) | வினைத் தூய்மை (Vinaiththooimai) |