குறள் (Kural) - 64

குறள் (Kural) 64
குறள் #64
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.

பொருள்
சிறந்த பொருளை அமிழ்தம் எனக் குறிப்பிட்டாலுங்கூடத் தம்முடைய குழந்தைகளின் பிஞ்சுக்கரத்தால் அளாவப்பட்ட கூழ் அந்த அமிழ்தத்தைவிடச் சுவையானதாகிவிடுகிறது.

Tamil Transliteration
Amizhdhinum Aatra Inidhedham Makkal
Sirukai Alaaviya Koozh.

மு.வரதராசனார்

தம்முடைய மக்களின் சிறு கைகளால் அளாவப்பெற்ற உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தை விட மிக்க இனிமை உடையதாகும்.

சாலமன் பாப்பையா

தம் பிள்ளைகளின் சிறு கையால் பிசையப்பட்ட கூழ், அமிழ்தைக் காட்டிலும் மிக இனிது.

கலைஞர்

சிறந்த
பொருளை அமிழ்தம் எனக் குறிப்பிட்டாலுங்கூடத் தம்முடைய குழந்தைகளின்
பிஞ்சுக்கரத்தால் அளாவப்பட்ட கூழ் அந்த அமிழ்தத்தைவிடச்
சுவையானதாகிவிடுகிறது.

பரிமேலழகர்

அமிழ்தினும் ஆற்ற இனிதே - சுவையான அமிழ்தத்தினும் மிக இனிமையுடைத்து; தம் மக்கள் சிறுகை அளாவிய கூழ் - தம் மக்களது சிறுகையான் அளாவப்பட்ட சோறு. (சிறுகையான் அளாவலாவது, 'இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும் - நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தல். புறநா.188)

ஞா.தேவநேயப் பாவாணர்

தம் மக்கள் சிறு கை அளாவிய கூழ் - தம் மக்களின் சிறுகைகளால் துழாவிக் குழைக்கப் பட்ட சோறு; அமிழ்தினும் ஆற்ற இனிதே - பெற்றோர்க்கு அவர்களின் மீதுள்ள காதல் மிகுதியால் தேவருணவினும் மிக இனிமையுடையதாம். தம் என்னும் சொல், பெற்றோரின் உடற்கூறாயிருந்து அவருடம்பினின்றும் வெளிப்பட்ட மக்களின் நெருங்கிய தொடர்பை உணர்த்தும். தேவருண வென்றது மக்களின் குருட்டு நம்பிக்கையான உலக வழக்கைத் தழுவியது. "படைப்புப் பல படைத்துப் பலரோ டுண்ணும் உடைப்பெருஞ் செல்வ ராயினும் இடைப்படக் குறுகுறு நடந்து சிறுகை நீட்டி இட்டுந் தொட்டுங் கவ்வியுந் துழந்தும் நெய்யுடை யடிசில் மெய்பட விதிர்த்து மயக்குறு மக்களை யில்லோர்க்குப் பயக்குறை யில்லைத்தாம் வாழு நாளே." (புறம். 188) "பொன்னுடைய ரேனும் புகழுடைய ரேனுமற் றென்னுடைய ரேனு முடையரோ-இன்னடிசில் புக்களையுந் தாமரைக்கைப் பூநாறுஞ்செய்யவாய் மக்களையிங் கில்லா தவர்".(நள. கலித்தொடர்.) என்னும் பாக்கள் இங்குக் கவனிக்கத் தக்கன.

மணக்குடவர்

இனிமையுடைத்தாகிய அமிழ்தினும் மிகவினிது, தம்முடைய மக்கள் சிறுகையாலே யளையப்பட்ட கூழ்.

புலியூர்க் கேசிகன்

தம்முடைய மக்களின் சின்னஞ்சிறு கைகளாலே அளாவப் பெற்றது, மிகவும் எளிமையுடைய கூழேயானாலும், அது பெற்றோருக்கு அமிழ்தினும் இனிமையானதாயிருக்கும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)மக்கட்பேறு (Pudhalvaraip Perudhal)