குறள் (Kural) - 63

குறள் (Kural) 63
குறள் #63
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.

பொருள்
தம் பொருள் என்பது தம்மக்களையேயாம் அம்மக்களின் பொருள்கள் அவரவர் செயல்களின் விளைவாக வரக்கூடியவை.

Tamil Transliteration
Thamporul Enpadham Makkal Avarporul
Thamdham Vinaiyaan Varum.

மு.வரதராசனார்

தம்மக்களே தம்முடைய பொருள்கள் என்று அறிஞர் கூறுவர். மக்களாகிய அவர்தம் பொருள்கள் அவரவருடைய வினையின் பயனால் வந்து சேரும்.

சாலமன் பாப்பையா

பிள்ளைகளைத் தம் செல்வம் என்று அறிந்தோர் கூறுவர். அப்பிள்ளைகள் உள்ளபடியே செல்வமாவது அவரவர் செய்யும் நற்செயல்களால் அமையும்.

கலைஞர்

தம் பொருள் என்பது தம்மக்களையேயாம். அம்மக்களின் பொருள்கள் அவரவர் செயல்களின் விளைவாக வரக்கூடியவை.

பரிமேலழகர்

தம் மக்கள் தம் பொருள் என்ப - தம் புதல்வரைத் தம் பொருள் என்று சொல்லுவர் அறிந்தோர்; அவர் பொருள் தம் தம் வினையான் வரும் - அப்புதல்வர் செய்த பொருள் தம்மை நோக்கி அவர் செய்யும் நல்வினையானே தம்பால் வரும் ஆதலான். ('தம்தம் வினை' என்புழித் தொக்கு நின்ற ஆறாம் வேற்றுமை, 'முருகனது குறிஞ்சிநிலம்' என்புழிப் போல உரிமைப் பொருட்கண் வந்தது. பொருள் செய்த மக்களைப் 'பொருள்' என உபசரித்தார். இவை இரண்டு பாட்டானும் நன்மக்களைப் பெற்றார் பெறும் மறுமைப் பயன் கூறப்பட்டது.

ஞா.தேவநேயப் பாவாணர்

தம் மக்கள் தம் பொருள் என்ப - தம் மக்களைத் தம் செல்வமென்று பாராட்டுவர் பெற்றோர்; அவர் பொருள் தம்தம் வினையான் வரும் - அம்மக்களின் மகச்செல்வம் அவரவர் வினைக் கேற்றவாறு வரும். இம்மையிலும் மறுமையிலுமாக எதிர்காலத்தில் தம் மக்கள் தமக்குச் செய்யக்கூடிய நன்மையை எள்ளளவும் எதிர்நோக்காதே, அவர்களைக் குழவிப் பருவத்திலும் பிள்ளைப் பருவத்திலும் தம் சிறந்த செல்வமாகப் பாராட்டுவது பெற்றோர் வழக்கம். மக்களைப் பெற்றோரின் உடைமையாகக் குறிக்கும்போதே அவ்வுடைமைகளும் பின்பு பெற்றோரைப்போல உடையோராக மாறும் நிலைமையிருத்தலால், அம்மாறுநிலைத் தொடர்ச்சியைக் காட்டற்கே அவர் பொருள் தந்தம் வினையான் வரும் என்றார். அது கரணிய (காரண)க் கிளவியமாயின், 'தம்வினை யான்வர லான்' என்றே அமைத்திருப்பார்.

மணக்குடவர்

தம்முடைய பொருளென்று சொல்லுவர் உலகத்தார் தம்மக்களை: அம்மக்களுடைய பொருள் தத்தமுடைய வினையோடே கூடவருதலான்.

புலியூர்க் கேசிகன்

‘தம் பொருள்’ என்று போற்றுதற்கு உரியவர் தம் மக்களேயாவர்; மக்களாகிய அவர்தம் பொருள்கள் எல்லாம் அவரவர் வினைப்பயனால் வந்தடையும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)மக்கட்பேறு (Pudhalvaraip Perudhal)