குறள் (Kural) - 632

குறள் (Kural) 632
குறள் #632
வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு.

பொருள்
அமைச்சரவை என்பது, துணிவுடன் செயல்படுதல், குடிகளைப் பாதுகாத்தல், அறநூல்களைக் கற்றல், ஆவன செய்திட அறிதல், அயராத முயற்சி ஆகிய ஐந்தும் கொண்டதாக விளங்க வேண்டும்.

Tamil Transliteration
Vankan Kutikaaththal Katraridhal Aalvinaiyotu
Aindhutan Maantadhu Amaichchu.

மு.வரதராசனார்

அஞ்சாமையும், குடிபிறப்பும், காக்கும் திறனும், கற்றறிந்த அறிவும் முயற்சியும் ஆகிய இவ்வைந்தும் திருந்தப்பெற்றவன் அமைச்சன்.

சாலமன் பாப்பையா

செயலுக்கு ஏற்ற மன உறுதி, மக்களைக் காத்தல், உரிய நீதி நூல்களைக் கற்றல், கற்றாரிடம் கேட்டு அறிதல், முயற்சி ஆகிய ஐந்தையும் உடையவரே அமைச்சர்.

கலைஞர்

அமைச்சரவை என்பது, துணிவுடன் செயல்படுதல், குடிகளைப் பாதுகாத்தல், அறநூல்களைக் கற்றல், ஆவன செய்திட அறிதல், அயராத முயற்சி ஆகிய ஐந்தும் கொண்டதாக விளங்க வேண்டும்.

பரிமேலழகர்

வன்கண் - வினை செய்தற்கண் அசைவின்மையும்; குடிகாத்தல் - குடிகளைக காத்தலும்; கற்று அறிதல் - நீதி நூல்களைக் கற்றுச் செய்வன தவிர்வன அறிதலும்; ஆள்வினையொடு - முயற்சியும்; ஐந்துடன் மாண்டது அமைச்சு - மேற்சொல்லிய அங்கங்கள் ஐந்துடனே திருந்த உடையானே அமைச்சனாவான். (எண்ணொடு நீண்டது. 'அவ்வைந்து' எனச் சுட்டு வருவிக்க. இந்நான்கனையும் மேற்கூறியவற்றோடு தொகுத்துக் கூறியது,. அவையும் இவற்றோடு கூடியே மாட்சிமைப்பட வேண்டுதலானும், அவற்றிற்கு ஐந்து என்னும் தொகை பெறுதற்கும். இனி, இதனை ஈண்டு எண்ணியவற்றிற்கே தொகையாக்கிக் குடிகாத்தல் என்பதனைக் குடிப்பிறப்பும் அதனை ஒழுக்கத்தால் காத்தலும் எனப் பகுப்பாரும் 'கற்று அறிதல்' என்பதனை கற்றலும் அறிதலும் எனப் பகுப்பாரும் உளர். அவர் 'உடன்' என்பதனை முற்றும்மைப் பொருட்டாக்கியும் 'குடி' என்பதனை ஆகுபெயராக்கியும் இடர்ப்படுப.)

புலியூர்க் கேசிகன்

மனவலிமையும், குடிகளைக் காத்தலும், அறநூல்களைக் கற்று அறிந்திருத்தலும், விடாமுயற்சியும், ஐம்புலன்களின் தூய்மையும் சிறந்திருப்பவனே, அமைச்சன்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அமைச்சியல் (Amaichiyal)
அதிகாரம் (Adhigaram)அமைச்சு (Amaichchu)