குறள் (Kural) - 631

குறள் (Kural) 631
குறள் #631
கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு.

பொருள்
உரிய கருவி, உற்ற காலம், ஆற்றும் வகை, ஆற்றிடும் பணி ஆகியவற்றை ஆய்ந்தறிந்த செயல்படுபவனே சிறந்த அமைச்சன்.

Tamil Transliteration
Karuviyum Kaalamum Seykaiyum Seyyum
Aruvinaiyum Maantadhu Amaichchu.

மு.வரதராசனார்

செயலுக்கு உரிய கருவியும், ஏற்றக் காலமும், செய்யும் வகையும் செய்யப்படும் அறியச் செயலும் சிறப்படையச் செய்ய வல்லவன் அமைச்சன்.

சாலமன் பாப்பையா

ஒரு செயலைச் செய்யத் தேவையான பொருள்கள், செய்வதற்கு ஏற்ற காலம், செய்யும் முறை, செய்யும் செயல் ஆகிய அனைத்திலும் நன்மை விளையும்படி எண்ணுபவரே அமைச்சர்.

கலைஞர்

உரிய கருவி, உற்ற காலம், ஆற்றும் வகை, ஆற்றிடும் பணி ஆகியவற்றை ஆய்ந்தறிந்த செயல்படுபவனே சிறந்த அமைச்சன்.

பரிமேலழகர்

கருவியும் - வினை செய்யுங்கால் அதற்கு வேண்டும் கருவிகளும்; காலமும் - அதற்கு ஏற்ற காலமும்; செய்கையும் - அது செய்யுமாறும்; செய்யும் அருவினையும் - அவ்வாற்றில் செய்யப்படும் அவ்வரிய வினைதானும்; மாண்டது அமைச்சு - வாய்ப்ப எண்ண வல்லவனே அமைச்சனாவான். (கருவிகள் - தானையும் பொருளும், காலம் - அது தொடங்குங் காலம், 'செய்கை' எனவே, அது தொடங்கும் உபாயமும், இடையூறு நீக்கி முடிவு போக்குமாறும் அடங்கின. சிறிய முயற்சியால் பெரிய பயன் தருவது என்பார், 'அருவினை' என்றார். இவை ஐந்தினையும் வடநூலார் மந்திரத்திற்கு அங்கம் என்ப.)

புலியூர்க் கேசிகன்

ஒரு செயலைச் செய்வதற்கு வேண்டிய கருவிகளையும், ஏற்ற காலத்தையும், செய்யும் வகையையும், செயலின் அருமையையும் நன்கு சிந்திப்பவனே, நல்ல அமைச்சன்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அமைச்சியல் (Amaichiyal)
அதிகாரம் (Adhigaram)அமைச்சு (Amaichchu)