குறள் (Kural) - 629

குறள் (Kural) 629
குறள் #629
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்.

பொருள்
இன்பம் வரும் பொழுது அதற்காக ஆட்டம் போடாதவர்கள், துன்பம் வரும் பொழுதும் அதற்காக வாட்டம் கொள்ள மாட்டார்கள் இரண்டையும் ஒன்றுபோல் கருதும் உறுதிக்கு இது எடுத்துக்காட்டு.

Tamil Transliteration
Inpaththul Inpam Vizhaiyaadhaan Thunpaththul
Thunpam Urudhal Ilan.

மு.வரதராசனார்

இன்பம் வந்திக் காலத்தில் அந்த இன்பத்தை விரும்பிப் போற்றாதவன் துன்பம் வந்த காலத்தில் அந்தத் துன்பத்தை அடைவது இல்லை.

சாலமன் பாப்பையா

தன் உடலுக்கு இன்பம் வரும்போது அதை மனத்தால் விரும்பாதவன், துன்பம் வரும்போது மனம் தளர்ந்து துன்பப்படமாட்டான்.

கலைஞர்

இன்பம் வரும் பொழுது அதற்காக ஆட்டம் போடாதவர்கள், துன்பம் வரும் பொழுதும் அதற்காக வாட்டம் கொள்ள மாட்டார்கள். இரண்டையும் ஒன்றுபோல் கருதும் உறுதிக்கு இது எடுத்துக்காட்டு.

பரிமேலழகர்

இன்பத்துள் இன்பம் விழையாதான் - வினையால் தனக்கு இன்பம் வந்துழி அதனை அனுபவியாநின்றே மனத்தான் விரும்பாதான்; துன்பத்துள் துன்பம் உறுதல் இலன் - துன்பம் வந்துழியும் அதனை அனுபவியாநின்றே மனத்தான் வருந்தான். (துன்பம் - முயற்சியான் வரும் இடுக்கண். இரண்டையும் ஒரு தன்மையாகக் கோடலின், பயன்களும் இலவாயின.)

புலியூர்க் கேசிகன்

இன்பமான காலத்திலும் இன்பத்தை நுகர விரும்பாதவன் எவனோ, அவன், துன்பமான காலத்திலும் எத்தகைய ஒரு துன்பமும் அடைய மாட்டான்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)இடுக்கண் அழியாமை (Itukkan Azhiyaamai)