குறள் (Kural) - 628
இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்.
பொருள்
இன்பத்தைத் தேடி அலையாமல், துன்பம் வந்தாலும் அதை இயல்பாகக் கருதிப்கொள்பவன் அந்தத் துன்பத்தினால் துவண்டு போவதில்லை.
Tamil Transliteration
Inpam Vizhaiyaan Itumpai Iyalpenpaan
Thunpam Urudhal Ilan.
மு.வரதராசனார்
இன்பமானதை விரும்பாதவனாய்த் துன்பம் இயற்கையானது என்று தெளிந்திருப்பவன், துன்பம் வந்த போது துன்ப முறுவது இல்லை.
சாலமன் பாப்பையா
உடம்பிற்கு இன்பம் விரும்பாதவனாய், அதற்கு வரும் துன்பத்தை இயல்புதானே என்பவன், மனம் தளர்ந்து துன்பப்படமாட்டான்.
கலைஞர்
இன்பத்தைத் தேடி அலையாமல், துன்பம் வந்தாலும் அதை இயல்பாகக் கருதிப்கொள்பவன் அந்தத் துன்பத்தினால் துவண்டு போவதில்லை.
பரிமேலழகர்
இன்பம் விழையான் இடும்பை இயல்பு என்பான் - தன் உடம்பிற்கு இன்பமாயவற்றை விரும்பாதே வினையால் இடும்பை எய்தல் இயல்பு என்று தெளிந்திருப்பான்; துன்பம் உறுதல் இலன் - தன் முயற்சியால் துன்பமுறான். (இன்பத்தை விழையினும், இடும்பையை இயல்பு என்னாது காக்கக் கருதினும் துன்பம் விளைதலின்,இவ்விரண்டுஞ் செய்யாதானைத் 'துன்பம் உறுதல் இலன்' என்றார்.)
புலியூர்க் கேசிகன்
இன்பம் உண்டாகிய போது அதனை விரும்பாதவனாக, துன்பம் வருதலும் இயல்பு என்று உணர்பவன், எந்தக் காலத்திலும் துன்பம் அடைய மாட்டான்
பால் (Paal) | பொருட்பால் (Porutpaal) |
---|---|
இயல் (Iyal) | அரசியல் (Arasiyal) |
அதிகாரம் (Adhigaram) | இடுக்கண் அழியாமை (Itukkan Azhiyaamai) |