குறள் (Kural) - 588

குறள் (Kural) 588
குறள் #588
ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்.

பொருள்
ஓர் உளவாளி, தனது திறமையினால் அறிந்து சொல்லும் செய்தியைக் கூட மற்றோர் உளவாளி வாயிலாகவும் அறிந்து வரச் செய்து, இரு செய்திகளையும் ஒப்பிட்டுப் பார்த்த பிறகே அது, உண்மையா அல்லவா என்ற முடிவுக்கு வரவேண்டும்.

Tamil Transliteration
Otrotrith Thandha Porulaiyum Matrumor
Otrinaal Otrik Kolal.

மு.வரதராசனார்

ஓர் ஒற்றன் மறைந்து கேட்டுத் தெரிவித்தச் செய்தியையும் மற்றோர் ஒற்றனால் கேட்டு வரச் செய்து ஒப்புமை கண்டபின் உண்மை என்றுக் கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா

ஓர் ஒற்றர் கொண்டு வந்த செய்தியை இன்னும் ஓர் ஒற்றர் தரும் செய்தியோடு சரி பார்த்துக் கொள்க.

கலைஞர்

ஓர் உளவாளி, தனது திறமையினால் அறிந்து சொல்லும் செய்தியைக் கூட மற்றோர் உளவாளி வாயிலாகவும் அறிந்து வரச் செய்து, இரு செய்திகளையும் ஒப்பிட்டுப் பார்த்த பிறகே அது, உண்மையா அல்லவா என்ற முடிவுக்கு வரவேண்டும்.

பரிமேலழகர்

ஒற்று ஒற்றித் தந்த பொருளையும் - ஒரொற்றன் ஒற்றிவந்து அறிவித்த காரியந்தன்னையும்; மற்றும் ஓர் ஒற்றனால் ஒற்றிக் கொளல் - பிறனோர் ஒற்றனாலும் ஒற்றுவித்து ஒப்புமை கண்டுகொள்க. (ஒற்றப்பட்டாரோடு ஒத்து நின்று மாறுபடக் கூறலும் கூடுமாகலின், ஒருவன் மாற்றம் தேறப்படாது என்பதாம்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

ஒற்று ஒற்றித் தந்த பொருளையும் - ஓர் ஒற்றன் ஒற்றி வந்து அறிவித்த செய்திகளையும்; மற்றும் ஓர் ஒற்றினால் ஒற்றிக் கொளல் -வேறும் ஓரொற்றனால் ஒற்றுவித்து ஒப்பு நோக்கி உண்மை யறிந்து கொள்க. பகைவரோ டொத்து நின்று உண்மைக்கு மாறாகக் கூறும் ஒற்றருமிருப்பராதலின் ,ஓரொற்றன் கூற்றைக்கேட்ட மட்டில் நம்பி விடக்கூடாதென்றும் , ஒற்றர் பலரையுந் தனித்தனி மறைவாகக் கேட்டு அவர் கூற்றுக்கள் ஒத்துவந்த வழியே நம்பவேண்டு மென்றும் ,பாதுகாத்துக் கூறினார். ஒற்றுதல் மறைவாகப் பொருந்தியறிதல். உம்மை யிரண்டனுள் முன்னது உயர்வு சிறப்புக் கலந்த எச்சம். பின்னது இறந்தது தழுவிய எச்சம் .இதனால் ஒற்றரை ஆளும் வகை கூறப்பட்டது.

மணக்குடவர்

ஒற்றர் மாற்றரசர்மாட்டும் பொருள் பெற்று மாறுபடச் சொல்லுதல் கூடுமாதலால், ஓரொற்று அறிந்து சொன்ன பொருளைப் பின்னையும் ஓரொற்றினாலே ஒற்றியறிந்து பின்பு அதனுண்மை கொள்க.

புலியூர்க் கேசிகன்

ஓர் ஒற்றன் அறிந்து வந்து சொன்ன செய்தியையும், மற்றுமோர் ஒற்றனை ஏவி அறிந்து வருமாறு செய்து, உண்மையை ஒப்பிட்டு அறிதல் வேண்டும்

பால் (Paal)பொருட்பால் (Porutpaal)
இயல் (Iyal)அரசியல் (Arasiyal)
அதிகாரம் (Adhigaram)ஒற்றாடல் (Otraatal)